தமிழக அரசியல் கட்சிகளின் படு கவர்ச்சித் திட்டங்கள்! எந்த கட்சியின் அறிவிப்பு டாப் லவல்?!
By Aruvi | Galatta | Mar 13, 2021, 12:18 pm
தமிழக அரசியல் கட்சிகள் பல கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், எந்த கட்சியின் அறிவிப்பு டாப் லவலில் இருக்கிறது என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அரசியல் அனல் காற்று பட்டிதொட்டி எங்கும் வீசத் தொடங்கி இருக்கிறது.
அதே நேரத்தில், நேற்று முதல் தமிழகத்தில் 5 முனை போட்டிகள் என்று இருந்த நிலையில், தேமுதிக தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளதால், இந்த முறை தமிழகம் 6 முனை போட்டியை சந்திக்கத் தயாராகிக்கொண்டு இருக்கின்றன.
அதன் படி, தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மநீம கூட்டணி, நாம் தமிழர் கட்சி, இறுதியாக தேமுதிக என்று இந்த சட்டப்பேரவை தேர்தலில் 6 முனை போட்டிகள் இருக்கப் போகின்றன.
அதே நேரத்தில், தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் படு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வருகின்றன. அதில், பெரும்பாலும் எந்த கட்சியினரும் முறையான தேர்தல் அறிக்கையை வெளியிடாத நிலையில், அவர்களின் பிராசத்தில் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், எந்த கட்சியினர் அறிவித்த திட்டம் மிகவும் கவர்ச்சிகரமான திட்டங்கள் என்பதை ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்துவிடலாம்.
அதிமுக கவர்ச்சித் திட்டங்கள்
- குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் தலா 1,500 ரூபாய் வழங்கப்படும்.
- ஆண்டுதோறும் 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக அளிக்கப்படும்.
திமுக கவர்ச்சித் திட்டங்கள்
- இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும்.
- கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.
அமமுக கவர்ச்சித் திட்டங்கள்
- வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
- விவசாயிகளுக்கு வீடு தேடி இடுபொருட்கள் மானியத்துடன் வழங்கப்படும்.
- மின்கட்டணம் மாதந்தோறும் செலுத்தும் முறை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை.
- கரும்பு டன்னுக்கு ரூ.4,000 விவசாயிகளுக்கு வழங்கப்படும்
- நெல்லுக்கு ஆதார விலை ரூ.3000 வழங்கப்படும்
- சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்
- அரசு வேலைகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்படும்
- இனிமேல் மதுபான ஆலைகளுக்கு அனுமதியில்லை. ஏற்கனவே உள்ள மதுபான ஆலைகள் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
மநீம கவர்ச்சித் திட்டங்கள்
- இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் திட்டம். வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
- ஒவ்வொரு வட்டாரம் வாரியாக ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில்களை உருவாக்கி இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி அவர்களது பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
- குடிசை வீடுகள் முதல் அனைத்து வீடுகளுக்கும் மிக அதிவேக இண்டர் நெட் இணைப்புடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
- சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்.
- தற்சார்பு கிராமங்கள் உருவாக்கப்படும்.
- இயற்கை வேளாண்மையுடன் கூடிய பசுமைப் புரட்சியை உருவாக்கும் திட்டம்
நாம் தமிழர் கட்சி கவர்ச்சித் திட்டங்கள்
- நீரு, வயிறு, உயிரு, அறிவு, பயன், வளர்ச்சி திட்டங்கள்.
- அரசுப் பள்ளியில் பயிலும் அனைவருக்கும் அரசு வேலை.
- தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்
- வாக்குக்குப் பணம் கொடுக்க வந்தால் ரூ.10,000 கேளுங்கள்.
அதாவது, எல்லா அரசியல் கட்சிகளும் கவர்ச்சித் திட்டங்கள் அறிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மட்டும் எந்த கவர்ச்சி திட்டங்களையும் இதுவரை அறிவிக்கவில்லை. மாறாக, “இலவசங்களே தேவையில்லை என்ற நிலையை உருவாக்கப்போவதாக” சீமான் வித்தியாசமான முறையில் வாக்குறுதி அளித்து வருகிறார்.
அதே போல், சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதால், அவர்களது தேர்தல் அறிக்கையும், வாக்குறுதிகளும் இனிமேல் தான் தெரிய வரும்.