சிறுவன் பலி எதிரொலி; புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது!
சிறுவன் பலி எதிரொலியாக புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்ட தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. மலைகள், பாறைகள் நிறைந்த பகுதியில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இதேபோல மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பயிற்சி மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பசுமலைப்பட்டியில் 2 நாட்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள மாவட்ட போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதில் மொத்தம் 34 பேரில் பகுதி, பகுதியாக துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு திட்டமிட்டிருந்தனர். பசுமலைப்பட்டியில் கடந்த டிசம்பர் இறுதியில் ஒரு பகுதியினர் துப்பாக்கி சுடும் பயிற்சியை முடித்தனர்.
அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி காலை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு குண்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தொலைவிற்கு பாய்ந்து சென்றது. அந்த குண்டு நார்த்தாமலையில் உள்ள ஒரு குடிசை வீட்டின் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த பதினொன்று வயது சிறுவன் புகழேந்தியின் தலையின் இடதுபுறத்தில் பாய்ந்தது. அந்த குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்து சிறுவன் மயக்கமடைந்து விழுந்தான். தலையில் இருந்து ரத்தம் வழிந்தது.
இதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனுக்கு மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் சி.டி. ஸ்கேன் எடுத்து பரிசோதித்தனர். இதில் தலையில் பாய்ந்த குண்டு மூளைக்கு அருகாமையில் இருந்தது தெரியவந்தது. இதனை உடனடியாக அகற்ற வேண்டிய நிலை இருந்தது. இதற்கு கூடுதலான வசதி தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் இருந்ததால் ஆம்புலன்சில் சிறுவன் புகழேந்தி அங்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
மேலும் அவனுடன் மருத்துவக்குழுவினரும் சென்றனர். தஞ்சாவூர் மருத்துவமனையில் மருத்துவக்குழுவினர் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையில் இருந்த குண்டை அகற்றினர். தொடர்ந்து மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். இதுபற்றி அறிந்த சிறுவனின் உறவினர்கள், குடும்பத்தினர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு விரைந்து வந்தனர். மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனை கண்டித்தும் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு தடைகோரியும் நார்த்தாமலையில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடைந்த பின் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனை தொடர்ந்து, பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் தளம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் புகழேந்தி சில தினங்களில் உயிரிழந்து விட்டான். இதனை அறிந்ததும், அவனது தந்தை கலைச்செல்வன், தாய் பழனியம்மாள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனை தொடர்ந்து புதுக்கோட்டை நார்த்தாமலையில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதன்படி, புதுக்கோட்டை நார்த்தாமலையில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டு உள்ளது. இந்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.