அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்!
By Madhalai Aron | Galatta | Nov 01, 2020, 04:26 pm
அருணாசல பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அருணாசல பிரதேசத்தின் சங்லாங் நகரில் இருந்து தென்மேற்கே 47 கி.மீ. தொலைவில் இன்று காலை 8.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விளைவுகள் பற்றிய விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
நாட்டின் வடபகுதியில் ஒருபுறம் பருவமழை பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், நிலநடுக்கங்களும் அடுத்தடுத்து ஏற்பட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் நேற்று பகல் 12.50 மணியளவில் ரிக்டரில் 3.1 அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
கடந்த 27ந்தேதி இதே சியோனி மாவட்டத்தில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதன் தாக்கம் நாக்பூர் மாவட்டம் வரை உணரப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை 6.16 மணிக்கு மீண்டும் சியோனி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஊர்மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.5 என்ற அளவில் பதிவாகியிருந்தது.
இதற்கிடையில் மத்திய பிரதேசத்தின் மற்றொரு மாவட்டமான சிந்த்வாராவில் நேற்று மாலை 5.20 மணிக்கு ரிக்டரில் 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோன்று, காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் நேற்று இரவு 10.29 மணிக்கு ரிக்டரில் 4.1 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் இரவு 11.36 மணிக்கு மீண்டும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியிருந்தது.
இந்தியாவின் வடக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.