சீமானைப் பற்றிப் பேசி என் தரத்தைக் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த வாரம் விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 

Seeman

அதன்படி, “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை, நாங்கள் தான் கொன்றோம்” என்றும், “ராஜீவ்காந்தியை கொன்றது சரிதான்” என்றும் அவர் பேசியிருந்தார். இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு தரப்பினரும், இந்த கருத்தைத் திரும்பப் பெற்று, மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், இந்த கருத்தைத் திரும்பப் பெற முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிய சீமான், அடுத்தடுத்து அதிரடியைக் கிளப்பினார். 

தமிழக அரசியல் வட்டாரத்தில், கடந்த ஒரு வாரக் காலமாகச் சீமான் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சீமானின் கருத்து குறித்து திமுக பொருளாளர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். 

Duraimurugan

அதற்குப் பதில் அளித்த அவர்,“சீமானை எல்லாம் அரசியல்வாதியாக நினைத்து, அவரை பற்றிப் பேசி என் தரத்தைக் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை” என்ற காட்டமாகப் பதில் அளித்தார்.

மேலும், “இறந்த தலைவர்களைப் பற்றி விமர்சிப்பது, அரசியலில் நாகரீகமற்றது” என்றும், அப்படி விமர்சிப்பவர்கள் தமிழக அரசியலில் இருப்பதை வெட்கக்கேடானது என்று நான் கருதுகிறேன்” என்றும் அவர் சர்சைக்குறிய வகையில் பதில் அளித்தார்.