தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம், திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொரோனா முதல் 3 அலைகள் வந்து சென்ற பிறகு, தற்போது தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி இருக்கிறது.

என்றாலும், தற்போது கோடை காலம் என்பதால், கோடை வெயில் சுட்டு எரித்துக்கொண்டு இருக்கிறது. 

இன்னொரு பக்கம், தமிழக சட்டமன்றம் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருக்கிறது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம்  18 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி முடிவடைந்தது. 

இதன் 2 வது பகுதியானது, ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி, தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு துறைகளின் கீழ் தமிழக அமைச்சர்கள், பல்வேறு அறிவிப்புகளை அன்றாடம் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் தான், தமிழக நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இரவு நேரத்தில் திடீரென்று அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

துரைமுருகனுக்கு திடீரென்று காய்ச்சல் வந்துள்ளது என்றும், இதன் காரணமாகவே, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்றும், அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்னொரு பக்கம் அவருக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து துரைமுருகன், உள் நோயாளியாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இதன் காரணமாக, இன்றைய தமிழக சட்டமன்றத்தில் அவர், அவை நடவடிக்கையில் பங்கேற்கவில்லை என்றும், கூறப்படுகிறது. 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரை முருகனை, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனிடையே, காய்ச்சல் காரணமான சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அமைச்சர் துரை முருகன் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம், திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏறப்படுத்தி உள்ளது.