கூடுகிது தி.மு.க. பொதுக்குழு கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! - சீனியர்களுக்கு பதவி தரப்படுமா?
By Madhalai Aron | Galatta | Sep 01, 2020, 03:45 pm
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டிகள் நிலவிவருகின்றன. சசிகலா விடுதலை, அதிமுக-வின் அடுத்தகட்ட நகர்வு, பாஜக உயர்வு, தனித்து நிற்குமா தேமுதிக என அனைத்து கட்சிகளும், ஒவ்வொரு எதிர்ப்பார்ப்புடன் இயங்கி வருகிறது.
திமுகவை பொறுத்தவரை, கலைஞர் கருணாநிதி இல்லாமல் திமுக சந்திக்க போகும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுதான். ஆகவே ஆட்சிக்கட்டில் மீதான ஆர்வம், திமுகவுக்கும் அதிகமாகவே இருக்கிறது. கருணாநிதியின் பிறந்தநாளில், இதை வெளிப்படையாகவே கூறியிருந்தார் அக்கட்சியின் தற்போதைய தலைவர் ஸ்டாலின்.
இப்படியான சூழலில், வரும் 9-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். செப்டம்பர் 9-ஆம் தேதியன்று, காலை 10 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 3 ஆம் தேதியும், பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதேபோல திமுக மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 3 (வியாழக்கிழமை) அன்று காலை 10:30 மணியளவில், காணொலி வாயிலாக நடைபெறும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி உயிரிழந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குப் பிறகு புதிய பொதுச் செயலாளர் மற்றும் காலாவதியான திமுகவின் பொருளாளர் பதவிக்கு புதிய நபர்களை தேர்ந்தெடுக்கும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் திமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 4,000-க்கும் அதிகமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், பொருளாளராக டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, ஆ.ராசா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் க.அன்பழகன் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவிக்கு திமுகவின் தற்போதைய பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இந்நிலையில், கட்சியில் சீனியர்-ஜூனியர் என்ற வேறுபாடு மாவட்டவாரியாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக, தற்போது மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்களில் மூவர் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள். இதனால் சீனியர்கள் பலரும் கலக்கத்தில் உள்ளார்கள். அதே நேரம் கட்சியின் தலைமை ஐம்பது வயதுக்குட்பட்டவர்களைப் பெரும்பாலும் மாவட்ட பொறுப்பாளர் பதவிக்குக் கொண்டுவரத் திட்டமிடுகிறது. ஏற்கெனவே மாவட்டச் செயலாளர்கள் பதவியில் பல ஆண்டுகளாகக் கோலோச்சும் சீனியர்களை அடுத்தகட்ட பதவிக்கு நகர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து சில தி.மு.க நிர்வாகிகள் பத்திரிகைகளில் பேட்டியளித்தபோது, ``அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில்வைத்து கட்சிக்குள் சில மாற்றங்களைக் கொண்டுவர தலைவர் திட்டமிட்டுள்ளார். மண்டலவாரியாக பொறுப்பாளர்களை நியமனம் செய்து, கட்சியை பலப்படுத்தும் திட்டமும் உள்ளது. அதற்கான அறிவிப்பு இந்தப் பொதுக்குழுவில் அறிவிக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் சீனியர்கள் இந்தப் பதவிக்குக் கொண்டுவரப்படலாம். அதேபோல் கட்சியில் சீனியர்களாக உள்ள ஜெகத்ரட்சகன், ஏ.வ.வேலு, பொன்முடி போன்றவர்களையும் மாநில அளவிலான பொறுப்புக்குக் கொண்டுவரக் கட்சித் தலைமை திட்டமிடுகிறது. இதற்காக துணைப் பொதுச்செயலாளர் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தவிருக்கிறது. அமைப்புச் செயலாளர் பதவியில் தற்போது ஆர்.எஸ்.பாரதி இருக்கிறார். `துணை அமைப்புச் செயலாளர்’ என்ற பதவியை உருவாக்கும் திட்டமும் உள்ளது" என்று கூறியிருக்கின்றனர்.