நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் இருப்பதால் பொதுமக்கள், நவம்பர் 16-ம் தேதி வரை நீலகிரிக்கு பயணம் செல்வதை தவிர்க்க மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும், வங்க கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெற்று சென்னை அருகே நேற்றிரவு கரையை கடந்தது. 

இதனால் தமிழகத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 7-ம் தேதியில் இருந்து 12-ம் தேதி வரையில், தமிழகத்தில் 142 சதவீதம் கூடுதலாக மழை பெய்திருக்கிறது.

இந்நிலையில், வங்கக்கடலில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (13.11.2021) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

N1

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வலுபெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் 12-ம் தேதி நிலவரப்படி இயல்பைவிட 95 முதல் 100 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. 

நீலகிரியைப் பொறுத்தவரை உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழையும், குன்னூர், கோத்தகிரி,குந்தா பகுதிகளில் வடகிழக்கு பருவமழையும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், குன்னூர்,கோத்தகிரி மற்றும் குந்தா பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. 

குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளாக 84 இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில்15 இடங்கள் மிக அதிக பேரிடர் பகுதியாகவும், 23 இடங்கள் உயர் பேரிடர் பகுதிகளாகவும் , 20 நடுத்தர பாதிப்பு பகுதியாகவும், 26 குறைந்த பாதிப்பு பகுதியாகவும் பிரித்துக் கண்காணித்து வருகின்றனர்.

n2

குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை, காற்று காரணமாக அவ்வப்போது சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தும், சிறிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டும் வருகின்றன. 

இந்நிலையில், நவம்பர் 13,14,15,16-ம் தேதிகளில் பொதுமக்கள் நீலகிரிக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தரப்பில் கூறுகையில், 'நவம்பர் 12 முதல் 16-ம் தேதி வரையிலான 5 நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும். 

இதனால் நீலகிரி மலையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்' எனக் கூறப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் நீலகிரியில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.