“என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது” சீனு ராமசாமி ஓபன் டாக்..
By Aruvi | Galatta | Oct 28, 2020, 01:39 pm
“எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக” இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இலங்கை தமிழரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு கதையானது, “800” என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டு வந்தது.
இந்த படத்தில், முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வந்தார். இலங்கை தமிழராகவே இருந்தாலும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரின் போது, “தமிழன் என்பதை மறந்து, அவர் சிங்களர்கள் பக்கம் நின்று, அதை நியாயப்படுத்திப் பேசவும் செயல்படவும் செய்ததாக” கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால், அந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என்றும், அந்த படத்தில் இருந்து விலகும் படியும், பல தரப்பில் இருந்தும் அவருக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
அப்போது, “எனது திரையுலக ஆசான் இயக்குனர் சீனு ராமசாமியை கேட்டு நல்ல முடிவாக எடுப்பேன்” என்று, நடிகர் விஜய் சேதுபதி கூறியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, “800 படத்தில் நடிக்க வேண்டாம்” என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு, முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்தார். இதன் காரணமாக, முத்தையா முரளிதரன் அறிக்கையுடன் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அத்துடன், விஜய் சேதுபதி “நன்றி வணக்கம்” என்றும், அந்த அறிக்கையுடன் பதிவிட்டு இருந்தார். இந்த “நன்றி வணக்கம்” “800" படத்தில் இருந்து விலகுவதாகவே பொருள் கொள்ளப்பட்டது. அதன் படி, அந்த படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகினார். ஆனால், இது தொடர்பான எதிர்ப்புக் குரல் எதிர்பாராத விதமாக இயக்குனர் சீனு ராமசாமி பக்கம் திரும்பி உள்ளது.
தமிழ் சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குநர் சீனு ராமசாமி, “கூடல் நகர்” படம் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். தொடர்ச்சியாக, “தென்மேற்கு பருவக்காற்று”, “நீர்பறவை”, “தர்மதுரை”, “கண்ணே கலைமானே” ஆகிய படங்களை இயக்கி, தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.
நடிகர் விஜய் சேதுபதியை, ஹீரோவாகவும் அறிமுகம் செய்தவரும் இவர் தான். இதனால், இயக்குநர் சீனு ராமசாமியை, தன்னுடைய குருநாதர் என்று தான், நடிகர் விஜய் சேதுபதி அழைப்பார்.
இந்நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி இன்று திடீரென்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்” என்று சீனு ராமசாமி பதிவிட்டிருந்தார். இதனால், திரையுலகில் மட்டுமல்லாது தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் சீனு ராமசாமி, “நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்பட்டதாகக் கூறி மிரட்டல்கள் வருவதாகவும், இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கவுள்ளதாகவும்” குறிப்பிட்டார்.
மேலும், “தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும், நடிகர் விஜய் சேதுபதியின் நலன் கருதியும், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான “800” இல் நடிக்க வேண்டாம் என்றும், விஜய் சேதுபதியிடம் அறிவுறுத்தினேன்” என்றும், சுட்டிக்காட்டினார்.
“ஆனால், விஜய் சேதுபதிக்கு எதிராக நான் இருப்பதாகக் கூறி, செய்திகள் சித்தரிக்கப்படுகின்றன” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார்.
“சமூக வலைதளம், வாட்ஸ்ஆப், செல்போனிலும் தொடர்ந்து ஆபாசமாக என்னைத் திட்டுகின்றனர் என்றும், கடந்த 5 நாள்களாக, வாட்ஸ்ஆப் மூலமும், செல்போனிலும் தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது” என்றும் வேதனை தெரிவித்தார்.
அத்துடன், “வாட்ஸ்ஆப் மெசேஜ் மூலமாக, எனக்கு நள்ளிரவு நேரத்தில் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகிறது என்றும், ஆபாசமாகப் பேசுகின்றனர். என்ன நோக்கத்துக்காக, இதுபோன்று செய்கின்றனர் என்பது தெரியவில்லை” என்றும், கவலையுடனும், அச்சத்துடனும் தெரிவித்தார்.
“கண்டிப்பாக, விஜய் சேதுபதி ரசிகர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள், அவர்கள் மிரட்டவும் வாய்ப்பில்லை. அவர்கள் எனது தம்பிகள்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.
“மிரட்டல்கள் தொடர்பாக, காவல்துறையினரிடம் விரிவாகப் புகார் அளிக்கவுள்ளேன் என்றும், குடும்பத்தினருடன் வசிக்கும் எனக்கு இது போன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வருவதால், முதலமைச்சர் கவனத்துக்கு உடனே கொண்டு செல்ல விரும்பினேன் என்றும், யார் இது போன்று செயல்களைச் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை” என்றும், கூறினார். இதனால், தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.