“தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்”… மத்திய அரசுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் கடிதம்!
தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அனுமதிக்கோரி மத்திய அரசுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிவேகம்க பரவி வருகிறது.
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் ,தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அனுமதிக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 28 பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 4 பேர் மட்டும் ஆபத்து அதிகம் இருக்கும் நாடுகளில் இருந்து வந்தவர்கள். 24 பேர் மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள்.
இதனால் இனி அனைத்து நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும் . அப்படி செய்தால் தான் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டவர்கள் அனைவருக்கும் 48 மணி நேரத்திற்குள் பாசிட்டிவ் வந்திருப்பது ஒமிக்ரானின் பரவும் தன்மை மிக வேகமாக இருப்பதை காட்டுகிறது.
தற்போது வரை பிரிட்டன் உட்பட 11 நாடுகள் ஆபத்தான பட்டியலில் வைக்கப்பட்டு அங்கிருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆபத்தில்லாத நாடுகளில் இருந்து வருவோருக்கு எவ்வித தீவிர கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்தது. ஆபத்தில்லாத நாடுகளில் இருந்து வருவோரில் வெறும் 2% நபர்கள் மட்டுமே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஆனால் இவ்வாறு செய்வது ஒமிக்ரான் பரவலை கண்டறிய உதவாது என்பதாலும், பரவல் அதிகரிக்கக் காரணமாகி விடலாம் என்பதாலும், எவ்வித வேறுபாடும் இன்றி அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த மத்திய சுகாதாரத்துறை அனுமதிக்க வேண்டும்.
அனைத்து வெளிநாட்டு பயணிகளும் வீட்டில் அல்லது மையங்களில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 8-வது நாளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 'நெகட்டிவ்' என முடிவு வந்தால் மட்டுமே விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுதிக்க வேண்டும்.
ஒரு விமானத்திலிருந்து மற்றொரு விமானத்திற்கு மாறுவதாக இருந்தால் கூட 'நெகட்டிவ்' முடிவு அவசியமாக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வந்து நெகட்டிவ் என்றால் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின் 8 ஆம் நாள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதில் தொற்று உறுதியானால் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி சிகிச்சை வழங்கப்படும். நெகட்டிவ் என்றால் மேலும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த, மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும்” எனக் கடிதத்தில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.