6 ஆண்டுகளாக என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்?.. அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக சாடிய கவுதம் கம்பீர்!
தலைநகர் டெல்லியில் கடந்த 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியும், அக்கட்சியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும், காற்று மாசைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுத்தனர் என பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் வாகனங்கள் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலைகளால் நாளுக்கு நாள் காற்று மாசடைந்து வருகிறது. இதனால் பெரும்பாலும் நகரங்களில் வசிக்கும் மக்கள், சுவாசக் கோளாறு காரணமாக அவதியுற்று வருகின்றனர்.
எனினும் எதிர்பாராத வகையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் காற்று மாசு பாதிப்பு சற்று குறைந்திருந்தது. குறிப்பாக தலைநகர் டெல்லியில், கொரோனா ஊரடங்கில் கட்டுப்பட்டு இருந்த காற்று மாசு, ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் மெல்ல அதிகரிக்க தொடங்கியது.
கடந்த சில நாட்களாக காற்று மாசு மிகவும் அபாய கட்ட அளவில் இருப்பதால், டெல்லி மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று வந்த போது, டெல்லி அரசு சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் முழு அளவில் ஊரடங்கை அமல்படுத்த தயார் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. ஆனால், காற்று மாசைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழலில் காற்று மாசைக் குறைக்க நடவடிக்கை எடுக்காத டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தற்போதைய டெல்லி பா.ஜ.க. எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கடுமையாகச் சாடியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''உச்ச நீதிமன்றத் தலையீட்டுக்குப் பின்புதான் டெல்லி அரசுக்கு ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகிறது. ஆண்டு முழுவதும் எங்கு சென்றிருந்தார்கள். டெல்லியின் காற்று மாசைச் சமாளிக்கவும், வேளாண் கழிவுகளை எரிப்பதை முடிவுக்குக் கொண்டுவரவும் தீர்வு இருக்கிறது என்று டெல்லி அரசு கூறியது. அந்தத் தீர்வு என்ன?
கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கெஜ்ரிவால் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. எந்த நகருக்கும் பொதுப் போக்குவரத்து முதுகெலும்பு போன்றது. அதை மேம்படுத்த கெஜ்ரிவால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் எவ்வாறு மக்கள் தங்கள் வாகனத்திலிருந்து பொதுப் போக்குவரத்துக்கு மாறுவார்கள். மக்களுக்கு எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.
கடந்த 6 ஆண்டுகளாக டெல்லியில் காற்று மாசைக் குறைக்க கெஜ்ரிவால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லாக்டவுன்தான் காற்று மாசைக் குறைக்கத் தீர்வு என்றால், அதை ஏன் முன்கூட்டியே செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்புதான் செய்ய வேண்டுமா?
டெல்லியில் காற்று மாசைக் குறைக்க எந்தவிதமான பணியும் செய்யவில்லை. உச்சநீதிமன்றம் தலையிட்டால்தான் செய்வேன் என்றால், ஓராண்டுக்கு முன்பே இதை ஏன் செய்யவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக காற்று மாசைக் குறைக்க டெல்லி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. பொதுப் போக்குவரத்தை முன்னேற்ற நடவடிக்கை என்ன?
காற்று மாசைக் குறைக்க, போக்குவரத்து சிக்னல் அருகே குழந்தைகள் நின்று பதாகைகளை ஏந்தி, பிரச்சாரம் செய்ய வைத்ததைத் தவிர வேறு என்ன செய்தது ஆம் ஆத்மி அரசு. இந்தக் குழந்தைகளின் கரங்களில் பதாகைகளை வழங்கியதற்கு பதிலாக லேப்டாப் வழங்கியிருந்தால், ஆன்லைன் வகுப்புக்கு படித்திருக்கும்.
வீட்டில் இருக்க வேண்டிய குழந்தைகளை 8 மணி நேரம் சாலையில் நிற்க வைத்தது டெல்லி அரசு. டெல்லி அரசு பொதுப் போக்குவரத்திலோ, உள்கட்டமைப்பிலோ முதலீடு செய்யவில்லை. யமுனையைச் சுத்தப்படுத்தக் கூட முடியவில்லை. உங்களை டெல்லியின் மகன் என்று அழைப்பது எளிது. ஆனால், டெல்லியின் மகனாக மாறுவது மிகவும் கடினம்'' இவ்வாறு கவுதம் கம்பீர் காட்டமாக கூறியுள்ளார்.