“தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம்!”
By Aruvi | Galatta | May 19, 2021, 03:33 pm
“தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக” மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா 2 ஆம் அலையின் தொற்று நோய், அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், அவற்றைக் கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் படி, “இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளதாக” கவலைத் தெரிவித்து உள்ளது.
“கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரே நாளில் 4 ஆயிரத்து 529 பேர் உயிரிழந்து உள்ளதாகவும்” கூறியுள்ளது.
“இதனால், நாடு முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது, 2 லட்சத்து 83 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளது” என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.
“உலக அளவில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா உயிரிழப்பு ஏற்பட்ட நாடாக இந்தியா தற்பொழுது முதல் இடத்தில் இருப்பதாகவும்” மத்திய சுகாதாரத்துறை கவலைத் தெரிவித்து உள்ளது.
அதே போல், கடந்த 24 மணி நேரத்தில், 3 லட்சத்து 89 ஆயிரத்து 851 பேர் குணமடைந்து உள்ளதாகவும், இது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 2 கோடியை 19 லட்சத்தைக் கடந்து உள்ளது” என்றும், கூறியுள்ளது.
அத்துடன், “நாடு முழுவதும் இதுவரை 18 கோடியே 58 லட்சத்து 9 ஆயிரத்து 302 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும்” மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
அதே நேரத்தில், “தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்த இரு வாரங்களில் கொரோனா 2 வது அலையானது, கடும் உச்சத்தை எட்டலாம்” என்று
கணிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, “இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக” மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அதன் படி, “இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம் பிடித்து உள்ளது என்றும், 10 மாநிலங்களில் 74 சதவீதம் புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளது” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது என்றும், ஆனால், கேரளாவில் நேற்று 31,337 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது” என்றும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருப்பூரில் தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.