நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை!
By Aruvi | Galatta | May 16, 2020, 03:41 pm
நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று மாலை புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஓடியுள்ள பகுதிகளில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் ஒடிசா, மேற்கு வங்க கடலோர மாவட்டங்களுக்குப் புயல் மற்றும் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், புயல் உருவான பிறகு தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால் வெப்பநிலை உயரக்கூடும் என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, மே 16, 17 ஆம் தேதிகளில் தெற்கு வங்கக்கடல் புயல் உருவாகும் என்றும், அது மே 17, 18 ஆம் தேதியில் மத்திய வங்கக்கடல் நோக்கி நகரும் என்றும், மே 19, 20 ஆம் தேதியில் வடக்கு வங்கக்கடல் பகுதியை நோக்கிச் செல்லும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
புயலுக்குப் பிறகு, வடதமிழகத்தில் இன்று முதல் 2-3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், வானிலை மையம் கூறியுள்ளது.
இதனிடையே, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.