சென்னையில் கொரோனாவுக்கு இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர்
By Aruvi | Galatta | Jun 04, 2020, 12:39 pm
சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா என்னும் கொடிய வைரஸ், தமிழகத்தின் பிற பகுதிகளில் சற்று குறைந்து இருந்தாலும், தலைநகர் சென்னையில் மையம் கொண்டு சற்று அதி தீவிரமாக பரவத் தொடங்கி உள்ளது.
இதனால், சென்னையில் கடந்த நான்கு நாட்களாக முன் எப்போதும் இல்லாத வகையில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டு வந்த நிலையில், நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் என கொரோனா பாதிப்பால் அடுத்தடுத்து தற்போது உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் என இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், சென்னை புழல் சிறையில் சிறைக்காவலர், கைதி என இருவருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புழல் சிறையில் இதுவரை 33 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,224 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2093 பேரும், கோடம்பாக்கத்தில் 2029 பேரும், தேனாம்பேட்டையில் 2014 பேரும், திரு.வி.க.நகரில் 1798 பேரும், அண்ணா நகரில் 1525 பேரும், அடையாறு பகுதியில் 1007 பேரும், வளசரவாக்கத்தில் 939 பேரும், அம்பத்தூரில் 651 பேரும், திருவொற்றியூரில் 610 பேரும், மாதவரத்தில் 431 பேரும், சோழிங்கநல்லூரில் 306 பேரும், பெருங்குடியில் 301 பேரும், மணலியில் 246 பேரும், ஆலந்தூரில் 261 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று உள்ளதாகப் பரவும் செய்தி பொய்யானது என்று ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.