தமிழகத்தில் மீண்டும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! தஞ்சையில் 11 பள்ளிகளில் கொரோனா பாதித்தோர் 142 ஆக உயர்வு
By Aruvi | Galatta | Mar 20, 2021, 10:20 am
தமிழகத்தில் 80 நாட்களுக்கு பிறகு கொரோனா பெருந் தொற்றின் பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டி உள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
தமிழகத்தில் சற்று குறைந்து காணப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளன. இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கையானது, ஒரே நாளில் மீண்டும் ஆயிரத்தை தாண்டிச் சென்றிருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து உள்ளதால், தமிழக மக்கள் தற்போது மீண்டும் பீதியடைந்து உள்ளனர்.
அதன் படி, தமிழகத்தில் கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி ஒரே நாளில் ஆயிரத்து 8 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு, சற்று குறைந்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது தற்போது நேற்றைய தினம் ஒரே நாளில் ஆயிரத்து 87 பேரை ஒரே அடியாக தாக்கி, நோய் தொற்றுக்கு ஆளாக்கி உள்ளனர். இதன் மூலமாக, தமிழகத்தில் இது வரையிலான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது தற்போது 8 லட்சத்து 64 ஆயிரத்து 450 ஆக உயர்ந்து உள்ளது.
அத்துடன், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 6 ஆயிரத்து 690 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில், புதிதாக 610 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து தற்போது வீடு திரும்பி உள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 8 லட்சத்து 45 ஆயிரத்து 178 ஆக உயிர்ந்து உள்ளது.
குறிப்பாக, நேற்யை தினம் ஒரே நாளில் 9 பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் சிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 12 ஆயிரத்து 582 ஆக அதிகரித்து இருக்கிறது.
மேலும், தஞ்சை மாவட்டத்தில் புதிதாக தற்போது 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 15 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் மட்டும், தஞ்சை, அம்மாபேட்டை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 11 பள்ளிகளை சேர்ந்த 26 ஆசிரியர்கள், 88 மாணவ - மாணவிகள் என மொத்தம் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கையானது தற்போது 142 ஆக அதிகரித்துள்ளது.
அதே போல், பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் என 15 பேருக்கு கொரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
முக்கியமாக, “கொரோனா பரவல் எதிரொலியாக, புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31 ஆம் தேதி வரை, பள்ளிகளுக்கு விடுமுறை” என்று, துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.