உலகளவில் 75 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி! 14 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..
By Aruvi | Galatta | 02:03 PM
உலகளவில் கொரோனாவுக்கு 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை சுமார் 75 ஆயிரத்தை நெருங்கி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், எப்போதும் எவரையும் தாக்கும் உயிர்க்கொல்லி நோயாகப் பரவி வருகிறது. இதனால். உலக மக்கள் யாவரும் இந்த உயிர்க்கொல்லி நோயின் பிடியிலிருந்த சிக்கித் தவித்து வருகின்றனர்.
சீனாவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அங்குப் புதிதாக 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் சுமார் 1200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால், அந்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 11 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் தற்போது வரை 3.67 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் நேற்று ஒரே நாளில் 843 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை தற்போது 8,911 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் இதுவரை 136,675 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் தற்போது வரை 13,341 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் 132,547 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் இதுவரை 16,523 பேர், கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டுமொத்தமாக உலக அளவில் கொரோனாவுக்க உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 74,782 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை 13,47,589 ஆக உயர்ந்துள்ளது.