தமிழகத்தில் 1629 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 18 ஆக உயர்வு
By Aruvi | Galatta | Apr 23, 2020, 04:30 pm
தமிழகத்தில் கொரோனா வைரசால் 1,629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் சற்று வேகம் எடுத்துள்ளது. தொடக்கத்தில் மெதுவாகப் பரவி வந்த கொரோனா வைரஸ், தற்போது சற்று அதிவேகமாகப் பரவி வருகிறது.
தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், சென்னையில் மட்டும் 4 தனியார் செய்தி தொலைக்காட்சி ஊழியர்கள் உட்பட, 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூரில் 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தருமபுரியில் மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று இன்று உறுதியாகியுள்ளது. 35 வயது ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படாத நிலையில், இன்று தருமபுரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் கொரோனா பரவாத மாவட்டமாகக் கிருஷ்ணகிரி திகழ்கிறது.
இதன் மூலம், தமிழகத்தின் 37 மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாகச் சென்னையில் 373 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 134 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் குணமடைந்து, இன்று வீடு திரும்பி உள்ளனர். நெல்லையில் ஊரடங்கின்போது மீட்கப்பட்ட ஆதரவற்றோர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமில் திறந்தவெளி திரையரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கை 18 ஆக இருக்கிறது.
மேலும், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக நேற்று ஒரே நாளில் 1.22 கோடி ரூபாய் அபராதம் வசூல் ஆகி உள்ளதாகத் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 2.68 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊரடங்கை மீறி செயல்பட்டதாக 2,68,537 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில். 2,85,150 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக திரையரங்குகளின் உரிமங்களைப் புதுப்பிக்க ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள், தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.