தமிழகத்தில் கொரோனா தொற்று 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு! - முதலமைச்சர்
By Aruvi | Galatta | 02:54 PM
தமிழகத்தில் கொரோனா தொற்று 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 40 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட 12 குழுக்களுடன், முதலமைச்சர் பழனிசாமி முக்கிய
ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது என்றும், தமிழகத்தில் கொரோனா ஒருங்கிணைப்புக்குழு சிறப்பாக பணியாற்றி வருவதாகவும்” குறிப்பிட்டார்.
“தமிழகத்தில் 3 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர் என்றும், இவர்களில் 73 ஆயிரம் பேருக்கு 3 வேளை உணவு தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது” என்றும் பெருமிதத்தோடு கூறினார்.
“கொரோனா சிகிச்சைக்குத் தமிழகத்தில் 137 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 3,370 செயற்கை சுவாச கருவிகள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், “4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், அவற்றில் 50 ஆயிரம் கருவிகள் இன்று தமிழகம் வந்துவிடும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது 2 வது நிலையில் இருப்பதாகவும், அது 3 வது நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தடுப்பு பணிகள் என்பது கூட்டுப் பொறுப்பு என்றும், இதனால் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தமிழக மக்களை முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.