தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் 10 ஆம் தேதி முதல் அமல்!
By Aruvi | Galatta | Apr 08, 2021, 01:44 pm
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் சற்று குறைந்து காணப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது கடந்த சில வாரங்களாக மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளன. இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கையானது, நேற்று ஒரே நாளில் மீண்டும் 4 ஆயிரத்தை நெருங்கியது.
கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது தற்போது மீண்டும் பல ஆயிரங்களை கடந்து வருவதால், தமிழக மக்கள் தற்போது மீண்டும் பீதியடைந்து உள்ளனர்.
அத்துடன், இந்தியாவில் புதிதாக இரு முறை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது. இதனால், பொது மக்கள் மீண்டும் பீதியடைந்தனர்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சித் தலைவர்கள் முதல், வேட்பாளர்கள் வரை அனைவரும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீவிர பிராச்சாரம் செய்து வந்தனர். இதனால், பல இடங்களில் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக, மீண்டும் கொரோனா பாதிப்பு பரவ தொடங்கியது என்றும் கூறப்பட்டு வந்தன.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கவும், அதனை கட்டுப்படுத்தவும் வரும் 10 ஆம் தேதி முதல் கோயில் திருவிழா மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தமிழக அரசு அதிரடியாகத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
அதே போல், தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்படுத்தவும் தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. இதனால், ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
குறிப்பாக, தமிழகத்தில் நடைபெறும் திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
மேலும், கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே போன்று, மாவட்டங்களில் உள்ள மொத்த வியபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்தும் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இவற்றுடன், ஹாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.