தலைமைச் செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு கொரோனா!
By Aruvi | Galatta | Jun 04, 2020, 09:03 am
சென்னை தலைமைச் செயலகத்தில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி உட்பட 30 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது சக ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் நேற்று முதன் முதலாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.
அதேபோல், நேற்று உயிர் இழந்த 11 பேரில், 8 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, சென்னை தலைமைச் செயலகம் உட்பட தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் கடந்த மே 18 ஆம் தேதி முதல் இயங்க தொடங்கி உள்ளன. வருகின்றன. அரசு ஊழியர்கள் அனைவரும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுக்கணக்கு குழு பிரிவில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த அலுவலகம் மூடப்பட்டது. ஆனாலும், கொரோனா பரவல் அங்கு தொடர்ந்து நீடித்தது.
இதுவரை சென்னை தலைமைச் செயலகத்தில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி உட்பட 30 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக, தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சரின் செயலாளர் பிரிவில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஊழியர் என 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை, பொதுப்பணித்துறை, நிதித்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவோர் என மொத்தம் 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தாக்கப்பட்டவர்களில் பலர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர், தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
50 சதவீத பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கிய 2 வாரங்களுக்குள், 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது, சென்னை தலைமைச் செயலக ஊழியர்களிடையே கடும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.