“மாமியார் மனமுவந்து கொடுத்த நிலத்தை பறிக்கும் மருமகன்..” காங்கிரஸ் எம்.பி.யின் செயலால் மக்கள் கவலை..!
சென்னை பனையூரில் மாமியார் குடும்பத்தினர், மக்களுக்கு மனமுவந்து மயானத்திற்காக கொடுத்த நிலத்தை, மருமகனும் காங்கிரஸ் எம்.பியுமான விஷ்ணு பிரசாத் பறித்துக் கொண்டதாக பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கவலைத் தெரிவித்து உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு “சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி, காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் சந்திப்பு தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்தது.
அதாவது, காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத், சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியை சந்திக்க சென்ற போது, அவரை கிட்டதட்ட 2 மணி நேரமாக நிற்க வைத்தே பேசியதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது, அந்த சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக தமிழகத்தின் புலனாய்வு பத்திரிகை ஒன்று “சென்னை மாவட்ட ஆட்சியருடன், காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் சந்திப்பு” குறித்து விளக்கமாக புட்டு புட்டு வைத்து உள்ளது. இது குறித்த செய்திகள் இணையத்தில் தற்போது வைரலாகி, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இது குறித்து களத்தில் இறங்கி நாமும் விசாரித்த போது பல தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி, “உத்தண்டி கிழக்கு கடற்கரையோரம் உள்ள ECR சாலையில் பனையூரை தாண்டி 25 ஆண்டுகளுக்கு முன்பு சில நில உரிமையாளர்களிடம் பவர் வாங்கி VGP உருவாக்கியது. கிட்டதட்ட 75 ஏக்கர் பரப்பிலான ECR சாலை முதல் கடற்கரை வரையிலான லே அவுட் அது. இந்த லே அவுட் மொத்தமும் சில நில உரிமையாளர்களுக்கு சொந்தமான நிலத்தில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக நிறைய சினிமா பிரபலங்கள், VIP க்கள், அதிகாரிகள், என்று பெரும் பணக்காரர்கள் பலரும், மனைகள் வாங்கி ஆடம்பர மாளிகைகள் கட்டி உள்ளனர்.
ஆனால், உத்தண்டி கிராமத்தின் பூர்வாங்க குடிகள் சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள், இன்னும் அதே கிராமத்தில் லே அவுட்டை தாண்டி தங்களது நாயக்கர் இன மக்கள் பூர்விக பகுதியில் பரம்பரை பரம்பரையாய் அங்கு இப்போது வரை வசித்து வருகிறார்கள்.
இந்த மக்கள், கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாய் அந்த பகுதியில் இருக்கும் இரு இடங்களை மயானமாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இதில், ஒரு மயானமானது, குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது. மற்றொன்று, அந்த பகுதியில் உள்ள கடற்கரை ஓரமாய் உள்ளது.
இதில், முதல் மயானத்தை சுற்றி மனை வாங்கிய மக்கள், இந்த மயானம் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருப்பதால் இங்கு பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றத்தை அணுகி தடை உத்திரவு பெற்று உள்ளனர்.
இதனால், கடற்கரை பகுதியின் அருகில் உள்ள சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாய் அப்பகுதி மக்கள் மயானமாக பயன்படுத்தி வந்த நிலத்தில், மீண்டும் இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த ஒன்றரை ஏக்கர் நிலமான ராஜராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமானதாகும்.
ஆனால், ராஜராஜேஸ்வரி சிறு வயதாக இருக்கும் போதே இந்த இடத்தை அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்த ஊர் மக்கள் மயனாமாக பயன்படுத்திக்கொள்ள மக்களின் பயன்பாட்டுக்காக மனமுவந்து அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான், நிலத்தின் உரிமையாளரான ராஜராஜேஸ்வரி தற்போது இறந்துவிட்ட நிலையில், ராஜராஜேஸ்வரியின் மருமகனும், தற்போதைய ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்.பியுமான விஷ்ணு பிரசாத், அந்த கடற்கரையோர மனைகளின் விலை உயர்ந்து கொண்டே வருவதை கணக்கில் கொண்டு, இந்த நிலத்தை அதிக விலைக்கு விற்கும் நோக்கில், கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் “இங்கு மயானம் பயன்படுத்த கூடாது” என்று, தடை செய்யக்கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
குறிப்பாக, “இந்த நிலத்தை மயானமாகவும், சுடுகாடாகவும் கடந்த 100 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மக்களை, அங்கு பிணங்களை எரிக்க விடாமல் தடுக்க அதிகாரிகளையும் அறிவுறுத்தி வருவதாகவும்” காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத் மீது அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
முக்கியமாக, உத்தண்டி கிராமத்தின் பூர்வாங்க குடிகளின் முதல் மயானமும் பயன்பாட்டுக்கு தடுக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த 2 வது மயானத்தையும் ஆரணி தொகுதி காங்கிரஸ் M.P விஷ்ணு பிரசாத், பறித்துக்கொண்ட நிலையில் பூர்வாங்க குடிகள் “அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் திக்கு தெரியாமல் திகைத்து வருகின்றனர்.
இதனால், 'கடந்த 100 ஆண்டுகளாக மயானமாகவும், சுடுகாடாகவும் பயன்படுத்தி வந்த இடம் பிரச்சனையில்” தமிழக அரசு நேரடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இப்படியாக, உத்தண்டி கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலம் தொடர்பான பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதால், இந்த விவகாரம் குறித்து பேச சென்ற போதுதான், சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி, காங்கிரஸ் M.P விஷ்ணு பிரசாத்திடம் சரியாக பிடிகொடுத்துப் பேசவில்லை” என்கிற தவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.
இப்படி, “காங்கிரஸ் எம்.பி.யிடம், மாவட்ட ஆட்சியர் சரியாக பிடிகொடுத்து பேசாமல் போனதால் தான், எம்.பி பிரச்சனையை திசை திருப்பியிருக்கிறார்” என்கிற தகவலும் வெளியாகி, இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.