“பாலியல் புகார்கள் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி” அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு
“தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் விதமாக, புகார் பெட்டி வைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று, கல்வி அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் படித்து வரும் பெண் குழந்தைகள் தொடர்ச்சியாக, அந்த பள்ளியின் சக ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகத் தொடர்ந்து அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. அது தொடர்பான நடவடிக்கையைத் தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான ஆசிரியர்கள் வரிசையாகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக, அண்மையில் சென்னை எஸ்.பி.பி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கினார். ராஜகோபாலன் போல பல ஆசிரியர்கள் இது வரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரித்த நீதிமன்றம், “பள்ளி மாணவ - மாணவிகள் பாலியல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கப் புகார் பெட்டி வைக்க வேண்டும்” என்று, உத்தரவிட்டிருந்தது. இதற்கான நடவடிக்கை எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித் துறை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், இனி இது போன்று பள்ளி மாணவிகள் யாருக்கும் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.
இந்த நிலையில் தான், தற்போது “பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குனர் கருப்பசாமி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த அறிக்கையில், “மாணவ மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டிகள் இருப்பதையும் அறிவிப்பு பலகையில் அனைத்து பெண் போலீஸ் நிலையத்தில் தொலைபேசி எண்கள் இடம் பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.
“மாதத்திற்கு ஒரு முறையாவது மெட்ரிகுலேஷன், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாலியல் புகார் அளிக்க வரும் மாணவ - மாணவிகளுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்” என்றும், அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.