சென்னையில் 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்! காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது அதிக கனமழைக்கு எச்சரிக்கை!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
வட கிழக்கு பருவமழையானது தற்போது இயல்பை விட சற்று அதிகமாக சென்னையில் கொட்டி தீர்த்து வருகிறது.
அத்துடன், தமிழகத்தில் பருவ மழை தொடங்கியது முதலே, தமிழகத்துக்கு இயல்பான அளவை விட அதிக அளவிலான மழை பதிவாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக, வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகனமான கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதால், தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதன் படி, இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் என்றும், இந்த 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக, சென்னையில் ஒரு சில இடங்களில் இன்றைய தினம் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் என்றும்; காஞ்சீபுரம், விழுப்புரம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதே போல், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
முக்கியமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் விடிய விடிய பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
இரவு முழுக்க பெய்த கனமழையால் சென்னை மாநகர் முழுவதும் உள்ள பல்வேறு சாலைகள் மற்றும் சுரங்க பாதைகள் வெள்ளத்தில் முழ்கின. தொடர்ந்து மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக அதிகாலை முதல் சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் அதிகபட்சமாக எண்ணூரில் 17.5 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
முக்கியமாக, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுன் கூடிய கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதால், மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கும் அதே நேரத்தில் சென்னையில் இன்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
அத்துடன், சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால், அதிக பட்சமாக 23 சென்டி மீட்டர் மழையும், சோழவரத்தில் 22 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில்தான், சென்னையின் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது, இன்னும் அதிக கனமழைக்குக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.