வண்டலூர் மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர்!
By Madhalai Aron | Galatta | Sep 17, 2020, 04:23 pm
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.55 கோடியில் 711 மீட்டர் நீளம், 23 மீ அகலம் கொண்ட 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் வண்டலூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ``வண்டலூர் மேம்பாலம் மூலம் கேளம்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையும். கோயம்பேடு மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.
பல்லாவரத்தில் இதற்காக இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் வண்டலூர் - கேளம்பாக்கம் - மாம்பாக்கம் சாலை இணையும் சந்திப்பில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். உடன், பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி. சாலையுடன் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் 80 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
மேலும், 30 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலங்கள் மற்றும் புறவழிச்சாலையை திறந்து வைத்து, 108 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 “யூ” வடிவ மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்.
பெரிய தெற்கத்தியச் சாலையில் வண்டலூர் - மாம்பாக்கம் - கேளம்பாக்கம் சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக ஓர் உயர்மட்டப் பாலம் கட்டப்படும் என்று பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை 45-ல் வண்டலூர் - கேளம்பாக்கம் - மாம்பாக்கம் சாலை இணையும் சந்திப்பில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
கடந்த 2011-12ஆம் ஆண்டிற்கான நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மானியக் கோரிக்கையின் போது, சென்னை பெருநகர மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், ஜி.எஸ்.டி. சாலையில் பல்லாவரம் பகுதியில் குன்றத்தூர் சாலை சந்திப்பு, சந்தை சாலை சந்திப்பில் ஓர் மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி. சாலையுடன் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் 80 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, இளையனார் குப்பத்தில் பழுதடைந்த பாலத்திற்கு மாற்றாக 23 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்குவழி உயர்மட்டப் பாலம் மற்றும் புதுப்பட்டினம் புறவழிச்சாலை; கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ்மாம்பட்டுவில், விக்கிரவாண்டி – கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் வேப்பூர் வட்டம், காட்டுமயிலூரில் காட்டுமயிலூர் - கொங்கராம்பாளையம் சாலையில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ரோட்டுப்புதூரில், கள்ளிமந்தயம் - ஓடைப்பட்டி சாலையில் 2 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; என மொத்தம் 165 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள், புறவழிச்சாலை, பாலங்கள், உயர்மட்டப் பாலம் ஆகியவற்றை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.
ரிப்பன் வெட்டி வண்டலூர் மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்ததை அடுத்து, மாநகரப் பேருந்துகள் ஒவ்வொன்றாக அணிவகுத்துச் சென்றன. அவ்வழியாக மாநகரப் பேருந்துப் போக்குவரத்தையும் முதல்வர் பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
சென்னைப் புறநகர்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள 6 வழிப்பாதைகளைக் கொண்ட வண்டலூர் மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டதால், கேளம்பாக்கம் சந்திப்பில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பெரியாரின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.