“சோதனை மேல் சோதனை ஆனாலும் தமிழகம் சாதனை” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்..
By Aruvi | Galatta | Apr 03, 2021, 01:05 pm
“நான் சோதனை மேல் சோதனை அனுபவித்த போதிலும், தமிழகம் சாதனை படைத்திருக்கிறது” என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்தோடு தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் நிறைவு பெறுவதை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் படி, சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, பொது மக்கள் முன்னிலையில் பேசிய முதலமைச்சர், “சேலம் மாவட்டம் அதிமுக கோட்டையாகத் திகழ்ந்துவருகிறது” என்று, பெருமையோடு குறிப்பிட்டார்.
“நான் இந்த மண்ணைச் சேர்ந்தவன்” என்று கூறிய முதலமைச்சர் பழனிசாமி, “நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்வேன் நான்” என்றும், அவர் நினைவு கூர்ந்தார்.
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, அவரது மகன் உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் என்று, அனைவரும் சேலத்தைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர்” என்றும், அவர் கூறினார்.
அத்துடன், “என்னைப் போல எந்த ஒரு முதலமைச்சரும் சோதனைக்கு மேல் சோதனையை அனுபவித்தது இல்லை என்றும், அந்த அளவுக்குச் சோதனைகளை அனுபவித்தவன் நான்” என்றும், அவர் தெரிவித்தார்.
மேலும், “நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார் என்றும், அதன் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்கும் சமயத்தில் திமுகவினர் என் மீதும், அமைச்சர்கள் மீதும் புத்தகங்களைத் தூக்கி வீசினர்” என்றும், சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, “சில திமுக உறுப்பினர்கள் எனது இருக்கை, அமைச்சர்கள் இருக்கைகள் மீது ஏறிநின்று நடனமாடினார்கள்” என்றும், அவர் கவலையுடன் தெரிவித்தார்.
“சட்டப் பேரவை என்பது, ஒரு புனிதமான இடம் என்றும், புனிதமான இடத்தில் இது போன்ற நிகழ்வுகளை திமுகவினர் செய்தனர்” என்றும், அவர் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
அதே நேரத்தில், “இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என மக்கள் யோசிக்க வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தோம். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் சட்டையைக் கிழித்துக்கொண்டு சாலையில் அமர்ந்தார்” என்றும், அவர் பழைய விசயங்களை நினைவு கூர்ந்தார்.
“திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், கலைஞர் டிவிக்கு பல நூறு கோடி கைமாறிய வழக்கு தூசி தட்டி எடுக்கப்பட்டு உள்ளது என்றும், 2ஜி அலைக்கற்றை வழக்கு மீண்டும் நடந்து வருகிறது” என்றும், அவர் பட்டியலிட்டார்.
“விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்யும் கட்சி திமுக என்றும், கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் போது தான், ஊழல் என்ற சொல் பிறந்தது என்றும். கண்ணுக்குத் தெரியாத காற்றில் ஊழல் செய்தார்கள் அவர்கள்” என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
முக்கியமாக, “அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்றும், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல 31 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கினோம் என்றும், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஏழாயிரம் கோயில்கள் சீர்செய்யப்படும்” என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதனிடையே, “அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு தொடர்ந்து செயல்படத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு உங்களின் பேராதரவினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்றும், எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.