“தமிழ்நாட்டில் ஆன்மீகம், ஆசிரியர் என்ற போர்வையில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பது வேதனை அளிப்பதாக உள்ளதாக” நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் சமீப காலமாக, ஆசிரியர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் என்ற பெயரில், தொடர்ச்சியான பாலியல் அத்து மீறல்கள் அரங்கேறி, நாளுக்கு நாள் புதியபுதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. இது தொடர்பாக தமிழக போலீசார் உடனுக்குடன் தொடர்ந்து நடவடிக்கை எடுத்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், இது தொடர்பாக மனம் நொந்துபோய் வேதனை அடைந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், தனது கருத்துக்களை அறிக்கையாக தற்போது வெளியிட்டு
உள்ளார்.

அந்த அறிக்கையில், 

“வணக்கம் . நான் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். 

என்ன நடக்கிறது! ஒன்றுமே புரியவில்லை!

'ஆசிரியர்'
என்ற போர்வையிலும், 'ஆன்மீகம்'
என்ற போர்வையிலும் அத்துமீறல்கள்.

ஏற்கனவே 'கொரோனா'
பெருந்தொற்று உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கொடுமைகள் வேறா?

பள்ளிக்கூடம்

சென்று தான் ஆக வேண்டும்.
குழந்தைகள் படித்துத்தான் ஆக வேண்டும்.
கொரோனா தொற்றின் தீவிரத்தால் ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு ஆசிரியர்களால் பாலியல் தொந்தரவு.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் 'பல ஆண்டுகளாக இது நடக்கிறது. நான் மட்டும் இல்லை.. இன்னும் பலரும் உண்டு' என்கிறார். ஒரு பள்ளி மட்டுமல்ல. பல
பள்ளிகளில் இதே தவறு நடக்கிறது என்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆன்மீகம்.

புனிதமான விஷயம்.
அது எந்த 'மார்க்கமாயினும்'
(மதம்) சரி..

'குரு' என்ற ஒருவர் அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால், அவர் குரு என்ற ஸ்தானத்திற்கு பொருத்தமானவரா என்பதை அறிதல் அவசியமன்றோ?” என்றும், கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், “இறைவனுக்கும், பக்தர்களுக்கும் இடையில் 'இடைத்தரகர்கள்' எதற்கு?

'இவர் மூலமாகத்தான் நீ என் அருளைப் பெற முடியும்' என்று இறைவன் எங்காவது சொல்லியிருக்கிறாரா?

படித்தவர்களும், படிக்காதவர்களும் கூட்டம் கூட்டமாக சென்று எதற்காக ஒருவனின் கால்களில் விழ வேண்டும். அவனை கடவுள், தெய்வம், சாமீ என்று ஏன்
துதிக்க வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

“ 'நரிக்கு நாட்டாம குடுத்தா.. கெடைக்கு ரெண்டு குட்டி கேக்கும்' என்று ஒரு பழமொழி உண்டு. அது போல் தானே இருக்கிறது இந்த ஈனச்செயல். உண்மையான
ஞானியோ, சித்தனோ தன்னை ஒரு போதும் விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை.

இவர்களுக்கு கூட்டம் கூடுவதும், இந்தக் கோமாளிகள் வேஷம் போட்டு ஆடுவதும், பிறகு சுயரூபம் தெரிந்தவுடன் தப்பித்து ஓடுவதும், 'முடிந்தால் கண்டுபிடி' என்று கண்ணாமூச்சி விளையாடுவதும் ஆன்மீகத்தையே அசிங்கப்படுத்தும் இழிசெயலன்றோ?

இவர்களால் உண்மையான குருமார்களுக்கும்..
ஏன்
இறைவனுக்குமே
பழிச்சொல் வராதா?
இறை நம்பிக்கை உடையவர்களை மற்றவர்கள் கிண்டலும் , கேலியும் செய்ய வழி  வகுக்காதா?

அரசாங்கத்திற்கு இவர்கள் பின்னாலேயே அலைவதா வேலை? ஒவ்வொருவருக்கும் ஒரு காவலரை நியமித்து கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா?
ஏற்கனவே அரசுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள்” இருக்கிறது என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மாண்புமிகு பிரதமர் அவர்களும்,

“மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், அனைத்துத் துறை சார்ந்தவர்களும், உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக போராடிக்
கொண்டிருக்கிறார்கள். இதில் இந்தத் 'தலைவலி' வேறு” என்றும், அவர் குறிப்பிட்டு பேசி உள்ளார்.

“ஆக,

கல்வியையும், ஆன்மீகத்தையும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்தக்குற்றவாளிகளை கழிவுகளாக எண்ணி, சிந்தை தெளிந்து மக்களாக விலகி வருவதே நாட்டுக்கும் நல்லது. நம்பிக்கைக்கும் நல்லது.

- வேதனையுடன் எம்.எஸ்.பாஸ்கர்” என, தனது கவலையையும், வேதனையும் அவர் பதிவு செய்திருக்கிறார்.