69-வது பிறந்தநாள் முன்னிட்டு பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மரியாதை!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது 69-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி, மற்றும் பெரியார் நினைவிடங்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி-கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டம், முதல் பொதுக்கூட்ட பேச்சு, திரையுலகில் கால் தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தின் தொடக்கம் என 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதி உள்ளார்.
இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகித்தார். தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசினார். ‘உங்களில் ஒருவன்’ பாகம்-1 புத்தகத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வெளியிட்டார்.
மேலும் மு.க.ஸ்டாலின் இந்த விழாவுக்கான அழைப்பிதழில், ‘எனது 23 வயது வரையிலான வாழ்க்கைதான் இந்த புத்தகம்! 1953 மார்ச் 1 அன்று நான் பிறந்தேன். 1976 பிப்ரவரி 1 அன்று மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த வரலாற்று சுவடுகளை உங்களில் ஒருவன் முதல் பாகமாக எழுதி இருக்கிறேன்’ என்று தனது கைப்பட எழுதி இருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்களும், தி.மு.க. நிர்வாகிகளும், அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகத்தை சேர்ந்தவர்களும், முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 69-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாநிதி மாறன், டி.ஆர். பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனது பிறந்த நாளை தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் எளிமையாக கொண்டாடுங்கள் என்று அவர் கேட்டு கொண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு அவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும்.
சென்னையில் வாழ்த்து அரங்கம், கவி அரங்கம், கருத்தரங்கம், இசை அரங்கம், நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதே போன்று மற்ற மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதனைத்தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் சென்னை, கலைவாணர் அரங்கில் ‘நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம்’ என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக கிளவ்டு கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஜப்பான், சீன, ரஷ்ய, பிரெஞ்ச் மொழிகளும் கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.