குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் உறவில் ஈடுபட்டதுபோல் வீடியோ எடுத்து மிரட்டல்! உண்மை எது? பொய் எது? குழப்பத்தில் போலீஸ்..
By Aruvi | Galatta | Sep 03, 2020, 12:01 pm
“குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் உறவில் ஈடுபட்டது போல் வீடியோ எடுத்து மிரட்டல் விடுப்பதாக” ஒரு தரப்பினரும், “பணம் தராமல் ஏமாற்றப் பொய்யாக ஜோடிக்கப்பட்ட மோசடி வழக்கு” என்று மற்றொரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருவதால், உண்மை எது? பொய் எது? என்று தெரியாமல் போலீசார் குழம்பிப்போய் உள்ளனர்.
சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்ததாரர் மகேஷ் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு இணைச் செயலாளராக இருந்து வருகிறார்.
மகேஷ் குமாரின் மனைவியின் தோழி குடும்பத்தினருடன் அவர் நட்பு பாராட்டி வந்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், வீடு வாங்கப் போவதாக மனைவியின் தோழி, அவரது கணவரான ரூப் சந்தர் ஆகிய இருவரும் சேர்ந்து பல தவணைகளாக 40 லட்சம் ரூபாய் வரை மகேஷ்குமாரிடம் கடனாக பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
கொடுத்த கடனுக்கு வட்டியும் வராமல், முதலும் வராமல் இருக்கவே, கொடுத்த பணத்தை மகேஷ் குமார் திரும்ப கேட்கச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது, அடியாள்களை வைத்து ரூப்சந்தர், மகேஷ் குமாரை சரமாரியாகத் தாக்கியதாக, இதனால் பயந்துபோன மகேஷ் குமார் தன்னை தாக்கிய ரூப்சந்தர் மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சாட்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
இதனையடுத்து, “வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எனது மனைவியை மகேஷ் குமாரும், அவரது மனைவியும் சேர்ந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் உறவில் ஈடுபட்டது போல வீடியோ ஒன்றைப் பதிவு செய்து வைத்துக்கொண்டு என்னை மிரட்டுவதாக” ரூப் சந்தர் பதில் புகார் அளித்தார். அத்துடன், ராயபுரம் காவல் நிலையத்திலும் அதே புகாரை அவர் அளித்து உள்ளார்.
ரூப் சந்தர் அளித்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி ஒப்பந்ததாரர் மகேஷ் குமார் மீது இரு காவல் நிலையங்களிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மாநகராட்சி ஒப்பந்ததாரர் மகேஷ் குமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்து உள்ளனர். அப்போது, விசாரணைக்குச் சென்றபோது, “வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரியதர்ஷினி, என்னைத் தகாத வார்த்தையால் திட்டியும், ரூப்சந்தருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும்” மகேஷ் குமார் குற்றம்சாட்டினார்.
அத்துடன், “காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி உடன் சேர்ந்து, ரூப்சந்தரும் என்னை மிரட்டி வருவதாகவும்” மகேஷ் குமார் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம், மகேஷ் குமார் புகார் அளித்தார். அந்தப் புகாரானது மத்திய குற்றப் பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மகேஷ் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணைக்குப் பிறகு, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மகேஷ்குமார், “ரூப் சந்தரின் மனைவி புகார் அளித்ததாகக் கூறப்படும் நாளில், அவர் கொரோனா சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்றும், ரூப் சந்தரின் தூண்டுதலின் பேரில் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், நானும் என் மனைவியும் தற்கொலைக்கு முயன்று தற்போது மீண்டுள்ளோம்” என்றும், தெரிவித்தார்.
இதனால், இந்த வழக்கில் உண்மை எது? பொய் எது? என்று தெரியாமல் போலீசார் தற்போது குழம்பிப் போய் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.