“பிரியாணியில் கறி இல்லை என கேஷியரை தாக்கியதாக இளைஞர்கள்! வெளியான சிசிடிவி காட்சியில் பரபரப்பு..
“பிரியாணியில் கறி இல்லை” என 3 பேர் சேர்ந்து, கேஷியரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சென்னை பெரியமேடு ஊத்துக்காட்டான் தெருவில் பிரபலமான பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்தக் கடையில், திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், கேஷியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தான், சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரபீக், சலீம் மற்றும் குல்லா என்கிற சண்முகம் ஆகிய 3 பேரும், அந்த குறிப்பிட்ட பிரியாணி கடையில் பிரியாணி பார்சல் வாங்கி உள்ளனர்.
அந்த பிரியாணி வாங்கும் போது, அந்த பார்சல் பிரியாணி அதிகமாக இல்லை என்றும், குறிப்பாக அந்த பிரியாணியில் கறி சரியாக வைக்கவில்லை என்றும் கூறி, அந்த கடைக்கு வந்து அந்த 3 பேரும் கடும் வாக்குவாதம் செய்து உள்ளனர்.
அத்துடன், அந்த பிரியாணி கடையில் இருந்த கேஷியர் விக்னேஷிடம் முதலில் வாய் பார்த்தையாக சண்டைப் போட்ட அந்த 3 பேரும், போக போக கடும் ஆத்திரத்தில் அந்த கடையின் கேஷியர் விக்னேஷிடம் சரமாரியாக தாக்கியதுடன், கரண்டியாலும் அவரை தாக்கி உள்ளனர்.
இப்படியாக, “பிரியாணியில் கறி இல்லை” என 3 பேர் சேர்ந்து, கேஷியரை தாக்கிய இந்த காட்சிகளானது, அந்த கடையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவானது.
பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விரைந்து வருவதற்குள், தாக்குதல் நடத்திய 3 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளனர்.
இதனையடுத்து, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த சிசிடிவி காட்சிகளை கைபற்றி, தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அப்போது, 3 பேரில் ஒருவரான ஆட்டோ ஓட்டுநரான ரபீகை கைது செய்த பெரியமேடு போலீசார், தலைமறைவாக உள்ள சலீம் மற்றும் சண்முகம் ஆகியோரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தான், “பிரியாணியில் கறி இல்லை” என்று 3 பேர் சேர்ந்து, கேஷியரை தாக்கிய காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.