ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்! சர்ச்சையில் சிக்கிய சென்னை ஐஐடி
By Aruvi | Galatta | Jan 28, 2021, 02:14 pm
சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு விரைவில் நீதி கிடைக்குமா என்ற கேள்வி, கருத்து யுத்தமாக மாறி உள்ளது.
சென்னை ஐஐடியில், ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டில் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் மாதவ் குமார் என்பவர், வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, சென்னை ஐஐடி பேராசிரியர் மாதவ் குமார், குறிப்பிட்ட அந்த மாணவிக்கு வாட்ஸ்ஆப்பில் பாலியல் தொல்லை தொடர்ந்து அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவி, அந்த பேராசிரியர் அனுப்பிய வாட்ஸ்ஆப் தகவல்களை ஒன்று சேர்த்து ஆதாரங்களுடன், கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ஹேமா மூர்த்தி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டனர்.
அதன் அடிப்படையில் தான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 மற்றும் செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் இது தொடர்பான விசாரணை நடைபெற்றது.
அதன் பிறகு, பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மாதவ் குமாரிடம் விசாரணை நடத்தியும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஆய்வு மாணவி அளித்த ஆதாரங்களை ஆராய்ந்தும், அந்தக்குழு அறிக்கை அளித்தது.
அந்த அறிக்கையில், பேராசிரியர் மாதவ் குமார் பாலியல் தொல்லை அளித்தது உண்மை என்றும், இது குறித்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த குழு பரிந்துரை செய்திருந்தது.
அத்துடன், பேராசிரியர் மாதவ் குமாருக்கு பாலியல் குற்றங்கள் குறித்த பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், 2 ஆண்டுகள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழி காட்டியாக இருக்க அனுமதிக்கக்கூடாது என்றும், மாணவிகளுக்கு 5 ஆண்டுகள் பாடம் நடத்தக்கூடாது என்றும், பேராசிரியர் பதவியில் இருந்து அவரை பதவியிறக்கம் செய்ய வேண்டும் என்றும், அந்த குழு பரிந்துரை செய்தது.
விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு சென்னை ஐஐடியின் இயக்குநர் பாஸ்கரன் ராமமூர்த்தியும், கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக, பேராசிரியர் மாதவ் குமார் உதவிப் பேராசிரியராக பதவியிறக்கம் செய்யப்பட்டார். அதே நேரத்தில், இதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாடினார். இதனால், ஐஐடி நிர்வாகம் நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து அமைதியாக இருந்தது.
இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி விரைந்து கிடைக்குமா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி பதிவாளரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “பாலியல் தொல்லை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் என்றும், இதனால் அது குறித்து கருத்து கூற முடியாது” என்று, மட்டுமே அவர் கூறினார்.
கடந்த ஆண்டு கேரள மாணவி மர்ம மரணத்தில் பேராசிரியர் மீது பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது. தற்போது மற்றொரு பேராசிரியர் மீது அங்குப் பயிலும் ஆய்வு மாணவி பாலியல் புகார் அளித்துள்ளதால், சென்னை ஐஐடி தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருவது அங்குப் பயின்று வரும் சக மாணவர்களிடையே கடும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.