“சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு..” சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல்! மேயர் ஆர்.பிரியா சூப்பர் அறிவிப்பு..
சென்னை மாநகராட்சியில் கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைய தினம் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் சற்று முன்னதாக தாக்கல் செய்தார். இதில், சென்னையின் வளர்ச்சி குறித்த பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம் பெற்று உள்ளன.
இந்த விழாவில், துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகிய இருவரும் முன்னிலை வகித்தனர்.
அப்போது, இந்த கூட்டத்தில் வரும் நடப்பு நிதி ஆண்டான 2022-23 ஆம் ஆண்டிற்கான பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்ள வரவு - செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, இந்த கூட்டத்தில் சொத்து வரி குறித்து பேச வேண்டும் என்று சற்று கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள், எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து, மேயர் பிரியா, திருக்குறள் வாசித்து மாமன்ற உரையை துவங்கினார். அப்போது, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என்று, பிரியா ராஜன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரியா ராஜன், “சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 40.80 கி.மீ நீளத்திற்கு 184.67 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு உள்ளது” என்று, கூறினார்.
“நேர்மையான சிந்தனைகளை உருவாக்க பள்ளிகளில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்” என்றும், சென்னை மேயர் பிரியா கூறினார்.
“மாற்றுத்திறனாளிகளுக்காக கடற்கரையில் நிரந்தர பாதை அமைக்கும் பணிக்கு 1.14 கோடி ரூபாய் பெறப்பட்டு உள்ளது என்றும், இந்த பணிகள் துவங்கப்பட்டு 2 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டும்” என்றும், மேயர் பிரியா குறிப்பிட்டார்.
“சென்னை மாநகராட்சியில் புதிதாக 3று டயாலிசிஸ் மையங்கள் தொடங்கப்படும் என்றும், படிப்படியாக அனைத்து மண்டலங்களில் டயாலிசிஸ் மையங்கள் ஏற்படுத்தப்படும்” என்றும், அவர் தெரிவித்தார்.
அதே போல், “கவுன்சிலருக்கான வார்டு மேம்பாட்டு நிதி 30 லட்சம் ரூபாயிலிருந்து 35 லட்சம் ரூபாயாக உயர்த்தியும்” மேயர் பிரியா அறிவித்தார்.
“இதன் மூலம் 200 வார்டுகளுக்கு 70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும்” தெரிவித்த மேயர் பிரியா, “டிஜி லாக்கரிலிருந்து வர்த்தகர்கள் வர்த்தக உரிமைகளை பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும்” என்றும், கூறினார்.
குறிப்பாக, “உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இணைய இணைப்பு வழங்கப்படும் என்றும், மாணவ - மாணவியரிடையே பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்” என்றும், மேயர் பிரியா அறிவித்தார்.
அதே போல், “சென்னை பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 72 ஆயிரம் மாணவ - மாணவிகளுக்கு 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் விலையில்லா சீருடைகள் வழங்கப்படும் என்றும், மாணவிகளுக்கு 23 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் எனவும் கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்படும்” என்றும், தெரிவித்து உள்ளார்.
மிக முக்கியமாக, “சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும், பள்ளிகளை பராமரிப்பதற்காக 16 கோடியே 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்” என்றும், சென்னை மேயர் பிரியா பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இன்று அறிவித்து உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, மேயர் பிரியா, “தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை” வாசிக்க மாமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.