கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து!
By Aruvi | Galatta | Jun 04, 2020, 02:48 pm
கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “ சென்னையில் அதிகரித்துக் காணப்படும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக” குறிப்பிட்டார்.
மேலும், “கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாகவும்” அறிவித்தார்.
“இனி, வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றால், மொத்த குடும்ப உறுப்பினர்களும் அரசு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுவார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, “கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 10 அல்லது 15 நாட்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்” என்றும் கூறினார்.
குறிப்பாக, “வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களில் 15 சதவீதம் பேர் கட்டுப்பாடுகளை மதிப்பதில்லை என்று கவலைத் தெரிவித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இதனால் தான் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று பரவுவதாகவும்” தெரிவித்தார்.
இதன் காரணமாக, சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, அரசு முகாம்கங்களில் தேவையான அளவுக்கு கூடுதல் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் இனி கொரோனாவுக்கு பாதிக்கப்படுவார்கள் அனைவரும் அரசு முகாம்கங்களில் அனுமதிக்கப்படுவார்கள்” என்றும், ஆணையர் பிரகாஷ் கூறினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், “சென்னையில் கொரோனா உள்ளவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும் என்றும், தனிமைப்படுத்துதலைக் கடைப்பிடிக்காதவர்கள் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர்” என்றும், விளக்கம் அளித்தார்.
மேலும், “சென்னையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்றும், மக்கள் முகக்கவசம் அணிவதை கடைப்பிடித்ததே தொற்று குறைய காரணம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மாஸ்க் அணிவதை மக்கள் அடுத்து ஒரு மாதத்திற்கு கட்டாயம் பின்பற்றினால் நோய் பரவலைத் தடுக்கலாம் என்றும், இந்தியாவில் குறைந்த அளவு இறப்பு சதவீதமாக இருந்தாலும் அதனை மேலும் குறைக்க வேண்டும்” என்றும், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.