மக்களே உஷார்.. போலீஸ் என கூறி வீடு வீடாக 4 பேர் ரெய்டு! சென்னை அண்ணாநகரில் பரபரப்பு..
By Aruvi | Galatta | Sep 29, 2020, 03:44 pm
சென்னை அண்ணா நகரில் போலீஸ் என கூறி 4 பேர் சேர்ந்து வீடு வீடாகச் சென்று ரெய்டு நடத்தி வரும் சம்பவம், பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் கொரோனா ஊரடங்கு சீசனுக்கு தகுந்தார் போல், வித விதமான முறையில் குற்றங்களும் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளும் வித்தியாசமாக யோசிக்கத் தொடங்கி உள்ளனர். அப்படி தான், சென்னை அண்ணா நகரில் நூதன முறையில் சில குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது, அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
சென்னை அண்ணா நகர் 4 வது பிரதான சாலையில் வசித்து வரும் 66 வயதான செல்லதுரை, சென்னை பூவிருந்தவல்லியில் ஸ்டேஷனரி கடை வைத்து நடத்தி வருகின்றார்.
இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி அன்று செல்லதுரை, தனது வீட்டிலிருந்து கடைக்கு சென்ற பிறகு, இவரது வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், நாங்கள் போலீஸ்” என்று கூறிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
மேலும், செல்லதுரை வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் அந்த மர்ம கும்பல் சோதனை செய்து உள்ளனர். சோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு, அங்கு எந்த பொருட்களையும் எடுக்காமல், “நாங்கள் மீண்டும் வருவோம்” என்றும், கூறிக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது.
இதனையடுத்து, செல்லதுரையின் மனைவி செல்லதுரைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால், கடையிலிருந்து பதறிப்போய் செல்லதுரை வீடு திரும்பி உள்ளார். வீட்டில் மனைவியிடம் என்ன நடந்தது என்று கேட்டு விசாரித்து உள்ளார்.
மேலும், இது குறித்து உடனடியாக அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று, அவர்களிடம் விசாரித்து உள்ளார். அப்போது, போலீசார் தரப்பில் “காவல் துறை சார்பில் யாரும் வரவில்லை” என்று அதில் அளித்து உள்ளனர். இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த செல்லதுரை, “எனது வீட்டில் சோதனை நடத்திச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்” அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதே கும்பல் அண்ணாநகர் சிந்தாமணி அருகே உள்ள ஒரு வீட்டில் நுழைந்து, “நாங்கள் போலீஸ்” என்று கூறிக் கொண்டு, அந்த வீடு முழுவதும் சோதனை செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அந்த சோதனைக்கு அந்த வீட்டு உரிமையாளர் உள்ளே அனுமதிக்காமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அந்த கும்பல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது குறித்தும், போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.
மேலும், அந்தக் கும்பல் வந்து சென்ற சிசிடிவி காட்சிகளையும், பாதிக்கப்பட்ட பொது மக்கள், காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அந்த கும்பல் “கடந்த சில நாள்களாக அண்ணா நகர் பகுதியில் டாடா சுமோ காரில் சுற்றித் திரிவதையும்” கண்டுப்பித்து உள்ளனர்.
அத்துடன், “காரில் சுற்றித் திரியும் அந்த கும்பல் உண்மையான போலீஸா? அல்லது போலியான போலீஸா?” என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டுள்ளது.