மது போதையில் போலீசாரை ஆபாசமாகத் திட்டி தாக்க முயன்ற இளம் பெண்! சென்னையில் பரபரப்பு..
By Aruvi | Galatta | Dec 06, 2020, 05:11 pm
மது போதையில் போலீசாரை ஆபாசமாகத் திட்டி தாக்க முயன்ற இளம் பெண்ணால் சென்னையில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்விற்குப் பிறகு, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.
அதன் படி, சென்னையில் மதுபானக் கடைகள், சொகுசு மதுபான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் சென்னை
ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள கடைகள் மற்றும் மதுபான விடுதிகளில் மது குடித்து விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவது அதிகரித்துக் காணப்படுவதாகத் தகவல்கள் போலீசாருக்கு வந்த வண்ணம் இருந்தன.
அதன்படி, குறிப்பிட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார், ரோந்து பணிகள் மற்றும் வாகன தணிக்கை குழு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சனிக் கிழமையான நேற்றைய தினம் இரவு போலீசார் திருவான்மியூர், பெசன்ட் நகர், ஈசிஆர் சாலை பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திருவான்மியூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சவுத் அவென்யூ சாலையில் ஒரு கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அத்துடன், அந்த காரை ஓட்டி வருபவர் மது போதையில் ஓட்டிவருவதும், அந்த கார் வந்த விதத்தில் போலீசாருக்கு தெரிய வந்தது.
இதனால், அந்த காரை மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அந்த காரில் ஒரு இளைஞரும், ஒரு இளம் பெண்ணும் அளவுக்கு அதிகமான மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நிதானம் இல்லாமல் இருந்த அந்த இளம் பெண், போலீசாரை மிகவும் ஆபாசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. அத்துடன், போலீசாரிடம் அந்த இளம் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்சனை செய்துள்ளதாகவும் தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாக, குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் மீதும், அந்த இளம் பெண் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்ததில், வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் அடையாறு பகுதியைச் சேர்ந்த 27 வயதான டோட்லா சேஷூ பிரசாத் என்பதும், உடன் வந்த இளம் பெண் அடையாறு பகுதியைச் சேர்ந்த காமினி என்பதும் தெரிய வந்தது.
மேலும், இளைஞர் மற்றும் அந்த இளம் பெண்ணின் உறவினர்களுக்கு போன் மூலம் போலீசார் தகவல் தெரிவித்து, அவர்களை அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர்.
இது மட்டும் இல்லாமல், “போக்குவரத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்களை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாகப் பேசிய இளம் பெண் காமினி மீது, நடவடிக்கை எடுக்கப் போக்குவரத்து போலீசார் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
இந்த நிலையில் தான், போக்குவரத்து போலீசார் பணி நேரத்தில் தங்களது உடலில் பொருத்தப்பட்டிருந்த பாடி ஒன் கேமரா மற்றும் மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அந்த வீடியோவில் அந்த இளம் பெண், அளவுக்கு அதிகமான மது போதையில் “நான் மீடியாவில் பணிபுரியும் பெண் என்றும், போலீசாரை ஒருமையில் பேசியும், அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசியும் போலீசாரை அடிக்க முயன்றது” பதிவாகி இருந்தது.
இந்தக் காட்சி பதிவுகளை வைத்து சம்மந்தப்பட்ட இளம் பெண் காமினி மீது, ஆபாசமாகத் திட்டுதல், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த திருவான்மியூர் போலீசார், இளம் பெண் காமினியிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, போக்குவரத்துக்கு ஆய்வாளர் மாரியப்பனை ஆபாச வார்த்தையால் திட்டியும், அவரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கிலும் மது போதையில் கார் ஓட்டிய டோட்லா சச்சின் பிரசாத் மற்றும் காமினி ஆகிய இருவரையும் போலீசார் தற்போது கைது செய்து உள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.