பத்மபூஷண், பத்மவிபூஷண், அன்னை தெரசா விருது, மகசேசே, நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள புற்றுநோய் மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவால் காலமானார். 93 வயதாகும் சாந்தா அவர்களுக்கு, இதயநோய் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர்பிரிந்தது. 


உலகில் எந்த முனையிலும் புற்றுநோய்கான புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை உடனடியாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிமுகம் செய்வார்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை, இந்திய மக்களிடத்தில் ஏற்படுத்தியதில் மருத்துவர் சாந்தாவுக்கு நிகர் யாரும் இல்லை. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணியில் சேர்ந்த முதல் மூன்று ஆண்டுகாலம் சம்பளம் பெறாமலே சேவை செய்தார். தனக்கு கிடைத்த விருதுகள் மூலம் கிடைத்த தொகையை மொத்தமும் புற்றுநோய் மருத்துவமனைக்கே செலவிட்டவர் மருத்துவர் சாந்தா. புற்றுநோய் மருத்துமனையிலேயே 66 ஆண்டுகள் பணியாற்றி, வாழ்நாள் முழுவதும் புற்றுநோய்யை ஒழிக்கும் முயற்சிலையே வாழ்நாளை செலவிட்டவர். 


மருத்துவர் சாந்தாவின் மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘’ மருத்துவர் சாந்தா அவர்களின் மறைவு மருத்துவ துறைக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. இவரது மருத்துவ சேவைப் பணிகள் உலக அளவில் பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்டது. மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2013 ம் ஆண்டு, மருத்துவர் சாந்தா அவர்களுக்கு ஔவையார் விருது வழங்கி சிறப்பித்தார்கள்.


 தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த மருத்துவர் சாந்தா அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் தன்னலமற்ற சேவையினை கௌரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின் போது காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவித்து உள்ளார்.


மேலும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், ‘’ புகழ் பெற்ற மருத்துவருமான டாக்டர் வி. சாந்தா அவர்கள் திடீரென மறைந்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் டாக்டர் சாந்தா அவர்களைப் போல் இன்னொருவரை இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே காண்பது அரிது. 


அவர் மீது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனி மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததை நானறிவேன். மனித குலத்தில் பிறந்த மரகதமணி போன்ற மருத்துவர் ஒருவரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கானவர்களை அன்புடன் கவனித்துக் குணமாக்கிய மனித நேயக் காவலரை இன்றைக்கு மருத்துவத் துறை இழந்திருப்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.” என இரங்கல் தெரிவித்துள்ளார்