கையில் பணம், ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு : முதல்வருக்கு ஸ்டாலினின் ஆலோசனைகள்!
By Madhalai Aron | Galatta | Jul 14, 2020, 02:51 pm
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவிலும் அதிகளவில் பரவ ஆரம்பித்தது. அதேபோல், தமிழகத்திலும், குறிப்பாகச் சென்னையில் ஒவ்வொரு நாளும் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேநேரத்தில் இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கொண்டுவந்துள்ள ஊரடங்கு உத்தரவினால் மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகச் சென்னை மட்டுமில்லாமல் உள் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா மற்றும் ஊரடங்கு பாதிப்புகள் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவம், பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வல்லுநர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். பொருளாதார வல்லுநர்களுடன் நடைபெற்ற ஆலோசனையில், தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்ற வேண்டியவை, தொலை நோக்காக நிறைவேற்ற வேண்டியவை என சில முக்கிய ஆலோசனைகளை திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக நான் வழங்கும் ஆலோசனைகளில் கவனம் செலுத்தி, கொரோனாவின் பேரழிவிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அவசர - ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் உடனடியாக எடுத்திட வேண்டும். தொடர்ச்சியாக நடந்துவரும் ஊரடங்கினால், மக்களுக்கு வாழ்வாதார இழப்பும், வாழ்க்கையில் பெரும் பின்னடைவும், மாவட்டங்களில் கடுமையான நோய்த் தொற்றும், மக்களை, திரும்பிய பக்கமெல்லாம் சுற்றி வளைத்திடும் சோதனைகள் திரண்டு மிரட்டி வருவது மிகுந்த கவலையளிக்கிறது.
முக்கிய எதிர்க்கட்சியான திமுக மட்டுமின்றி, எந்தவொரு அரசியல் கட்சியின் ஆலோசனைகளையும், காது கொடுத்துக் கேட்கும் ஜனநாயகப் பக்குவம் இன்றி நிராகரித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவும் மனமில்லாமல் மறுத்து - தன்னிச்சையாக அதிமுக அரசு செயல்பட்டதால், தற்போது கொரோனா நோய்த் தொற்று 'கிராமப்புற பரவலாக' மாறி, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன.
இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு, அரைகுறை வாழ்க்கை நிலை நான்கு மாதத்திற்கும் மேல் நகர்வது தொடர்கிறது. இந்தச் சூழ்நிலையில், பொறுப்புள்ள பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், மருத்துவ - பொருளாதார - தொழில்துறை வல்லுநர்களைக் காணொலிக் காட்சி மூலம் அழைத்துப் பேசி அவர்களின் கருத்துரைகளைக் கேட்டேன். அதன்படி, 'உடனடியாக நிறைவேற்ற வேண்டியவை', 'தொலை நோக்காக நிறைவேற்ற வேண்டியவை' என்ற அடிப்படையில் பொருளாதார வல்லுநர்கள் அளித்த சில முக்கிய ஆலோசனைகளை, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சேர்ப்பது எனது கடமை என்ற அடிப்படையில் இங்கு முன்வைக்கிறேன்.
ஸ்டாலின் தெரிவித்துள்ள முக்கிய ஆலோசனைகள்!
ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சமாளிப்பதற்கு, அனைவருடைய கையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் வாங்கும் திறனை உயர்த்த வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக அளித்த 1,000 ரூபாய் போதாது என்பதால், குறைந்தபட்சம் 5,000 ரூபாயாவது ஒவ்வொரு குடும்பத்துக்கும் நேரடியாகப் பணமாக வழங்கப்பட வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் உற்பத்தியாகும் பொருட்களும், மக்களும் ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்குச் செல்வதை முறைப்படுத்தலாம். ஆனால், அறவே தடை செய்யக் கூடாது. பொருட்கள் செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்கும் சில தளர்வுகளுக்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும்.
வேலையில்லாமல் தவிக்கும் கிராம மக்களின் வருமானத்தை வலுப்படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை வருடத்திற்கு 250 நாட்களாக உயர்த்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அரசாங்கம் அதன் மூலதனச் செலவினங்களைச் சுகாதாரத் துறையிலும், தேவையான பிற தேவைகளிலும் அதிகரிக்க வேண்டும். இது பணப்புழக்கத்தை மேம்படுத்துவதோடு தற்போதைய நிலைமையைச் சமாளிப்பதற்கும் உதவும்.
ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும். தற்போதைய ஜிஎஸ்டி கட்டமைப்பில், மத்திய அரசு மிக நீண்ட நிலுவைத் தொகையைக் கொண்டிருப்பதால், மாநில அரசுகளுக்குச் செலுத்தவேண்டிய தொகையைச் செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. ஆதலால், கொரோனா நெருக்கடி தீரும் வரையிலாவது மாநிலங்கள் தங்களை ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஏழு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
- பெ.மதலை ஆரோன்