தியாக தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் எழுதிய நூல்- நடிகர் சத்யராஜ்!
தியாக தலைவரின் மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நூலில் அபூர்வ தகவல்கள் இடம் பெற்றுள்ளது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி-கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டம், முதல் பொதுக்கூட்ட பேச்சு, திரையுலகில் கால் தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தின் தொடக்கம் என 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதி உள்ளார்.
இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகித்தார். தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசினார். ‘உங்களில் ஒருவன்’ பாகம்-1 புத்தகத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வெளியிட்டார்.
மேலும் மு.க.ஸ்டாலின் இந்த விழாவுக்கான அழைப்பிதழில், ‘எனது 23 வயது வரையிலான வாழ்க்கைதான் இந்த புத்தகம்! 1953 மார்ச் 1 அன்று நான் பிறந்தேன். 1976 பிப்ரவரி 1 அன்று மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த வரலாற்று சுவடுகளை உங்களில் ஒருவன் முதல் பாகமாக எழுதி இருக்கிறேன்’ என்று தனது கைப்பட எழுதி இருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்களும், தி.மு.க. நிர்வாகிகளும், அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகத்தை சேர்ந்தவர்களும், முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற நூல் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது: தியாகத்தலைவரின் மகனாக பிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய நூலை படிக்க, படிக்க சிரிக்கவும், ரசிக்கவும் முடிகிறது. ஆர்வமாகவும், உணர்ச்சி வசப்படவும் முடிகிறது. இந்த நூலில் பல அபூர்வமான தகவல்கள் எழுதப்பட்டு உள்ளது. அனைவரும் படிக்க வேண்டும்.
தாத்தா முத்துவேல் பற்றி எழுதும் போது, புலவர் நன்றாக பாடுவார், விவசாயம், சமஸ்கிருதம் நல்லா தெரியும் என்று எழுதி உள்ளார். அப்படியானால் அவர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து டாக்டராக ஆகி இருக்கலாம். காரணம் அந்த காலத்தில் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும். இந்த நிபந்தனை ஏன் என்றால் நாம் மருத்துவ படிப்பு சேர கூடாது என்பதற்காகதான். அதனை அடித்து உடைத்தது நீதி கட்சி.
கோபாலபுரம் வீடு பற்றி எழுதும்போது நிரந்தர அரசவை, திராவிட கட்சியின் திருச்சபை, திரையுலகத்தின் கலைசபை என்று எழுதப்பட்டுள்ளது. அந்த கலைச்சபையில் நானும் ஒருவன். மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க. தொண்டர்கள் எப்படி கைது செய்யப்பட்டு சிறை செல்கிறார்களோ, அதேபோல்தான் ஸ்டாலினும் சிறை செல்கிறார் என்று எந்தவித வருத்தமும் இல்லாமல் கருணாநிதி கூறினார். ஒரு தலைவனே தொண்டனாக இருப்பதும், தொண்டனே தலைவனாக இருப்பதும் கருணாநிதி தான்.
மேலும் அதேபோல், 2-ம் பாகம் ஆர்வமாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே மிசாவை மட்டும் ஒரு திரைப் படம் எடுக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். தீவிர எம்.ஜி.ஆர். ரசிகனான நான், எம்.ஜி.ஆர். தீவிர ரசிகரான ஸ்டாலினை வாழ்த்துகிறேன் என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.