“வெளியே போக இவ்வளவு பில்டப்பா?” பாஜகவை வறுத்தெடுத்த சபாநாயகர் அப்பாவு
“வெளியே போறதுக்கு இவ்ளோ பில்டப் வேண்டாம், போக நினைத்தால் போய்விடுங்கள்” என்று, பாஜகவை பார்த்து சபாநாயகர் அப்பாவு கூறியது, சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
இன்றைய தினம் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி, நடைபெற்று வருகிறது.
இந்த சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில், நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்து அதை திருப்பி அனுப்பி உள்ளார் என்றும், பொதுமக்களின் கருத்து கேட்ட பிறகே நீட் விளக்கு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், நீட் மசோதா தொடர்பான ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானவை என்றும், பலமுறை தேர்வு எழுதுவோருக்கு நீட் தேர்வு சாதகமாக உள்ளது என்றும், தனியார் பயிற்சி மையங்கள் படித்தவர்கள் மட்டுமே இதில் வெற்றி பெறும் வகையில் நீட் தேர்வு உள்ளது” என்றும், பேசினார்.
அப்போது, நீட் விலக்கு மசோதா குறித்த சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத் தொடரிலிருந்து, பாஜக வெளிநடப்பு செய்தது.
முன்னதாக, ஆளுநர் அனுப்பிய கடிதம் வெளியானதை சபாநாயகர் அப்பாவு, மிக கடுமையாக விமர்சித்த நிலையில் தான், மா.சுப்ரமணியன் பேசினார்.
அதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைபாடு குறித்து பேச சபாநாயகர் அனுமதி அளித்தார். அப்போது, பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேச முற்பட்டார்.
ஆனால், அந்த நேரத்தில் சபாநாயகர் அப்பாவு, வேறொரு பேரவை உறுப்பினருக்கு பேச வாய்ப்பு அளித்திருந்தார். ஆனாலும் நயினார் நாகேந்திரன் குறுக்கிட்டு பேச முயன்றதால், “இங்கு ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொருவருக்கும் பேச வாய்ப்புகள் அளிக்கப்படும். அப்படி உங்களுக்கும் நேரம் தரப்படும். அப்போது நீங்கள் விரிவாக பேசலாம். 100 சதவீதம் உங்களுக்கு விரிவாக பேச வாய்ப்பு வழங்கப்படும். இருந்து, எல்லோர் கருத்தையும் கேட்ட பிறகு, நீங்களும் விரிவாக பேசிவிட்டு, நீங்கள் வெளியில் செல்லலாம். அவசரப்படாதீர்கள்” என்றார்.
ஆனால், பாஜக தரப்பில் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், தொடர்ந்து பேசியதால், சில நிமிடங்கள் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், ஒருகட்டத்தில் நயினார் நாகேந்திரனுக்கு, சபாநாயகர் வாய்ப்பு வழங்கினார். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், “இந்த நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால், அன்றைய தினம், பாஜக வெளிநடப்பு செய்திருந்தது. அதை ஒருமனதாக ஏற்கப்பட்டதாக பார்க்க முடியாது” என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, “அன்றைய தினம் சட்டசபையில் வெளிநடப்பு செய்தது நீங்கள் தான். அவையில் இருக்கும் எல்லோரின் அனுமதியுடன் தான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான்” என்று பதில் அளித்தார்.
அப்போது எழுந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், சபாநாயகரின் வார்த்தைகளை வழி மொழிந்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய, சபாநாயகர் அப்பாவு, “வெளியே போறதுக்கு இவ்ளோ பில்டப் வேண்டாம். போக நினைத்தால் போய் விடுங்கள்” என்று கூறி, கூறினார். இதனால், சட்டசபையில் சிறுது நேரம் கலகலப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவை அவமதிக்கும் நோக்கம் ஆளுநருக்கு இருக்காது” என தெரிவித்தார்.
அத்துடன், “அவர் சில கேள்விகள் முன்வைக்கையில், அவருக்கு சபாநாயகர் விளக்கம் அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக, பிற உறுப்பினர்கள் பேச சபாநாயகர் அனுமதி அளித்தார். ஆனால், பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் அமராமல் தொடர்ந்து பேச முற்பட்டார். அப்போது, “நயினார் நாகேந்திரன் உட்காருங்கள். உங்கள் நேரம் வருகையில் விரிவாக பேசலாம். உங்களை தடுக்கமாட்டோம். அப்போது பேசிவிட்டு, பின் வெளியே செல்லுங்கள். தப்பில்லை” என்றார்.
இதனையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை புறக்கணித்து, அந்த நேரத்தில் வெளிநடப்பு செய்தனர். இதனால், அங்கு லேசான சலசலப்பு ஏற்பட்டது.
இதனிடையே, சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டப் பேரவைக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன், “ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை ஆளுநர் அவமானப்படுத்துவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியிருந்தார். ஆளுநருக்கு அப்படியான நோக்கம் ஏதும் இல்லை” என்றும், விளக்கம் அளித்தார்.
இதனிடையே, “வெளியே போக இவ்வளவு பில்டப்பா?” என்று, பாஜகவை சபாநாயகர் அப்பாவு வறுத்தெடுத்த நிகழ்வு, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.