“கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ.2000 தருவது தான் தமிழக அரசியல்!” அதிமுகவை சீண்டினாரா பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை?
By Aruvi | Galatta | Dec 21, 2020, 12:32 pm
“கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு தேர்தல் நேரத்தில் 2000 ரூபாய் தருவது தான் தமிழக அரசியல்” என்று, தமிழ் மாநில பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது, அதிமுகாவை சீண்டிப்பார்க்கிறாரா? என்று விமர்சனமும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் களம் தற்போது விருவிருப்பு அடைந்துள்ளது.
அதிகமுக வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனை அந்த கட்சிக்குள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூதாகாரமாக வெடித்து, அடங்கிய நிலையில், தற்போது ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளது.
முக்கியமாக, “அதிமுக வை ஓரங்கட்டி திமுக வை எதிர்க்கட்சியாக்குவதே பாஜக வின் திட்டம்” என்று, தமிழக தலைவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட விமர்சனம் செய்திருந்தார்கள்.
அதற்கு காரணம், அது தொடர்பான சம்பங்களே தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதாவது, அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டே அந்த கட்சியை பாஜக தொடர்ந்து கடுமையாக விமர்சித்தும் வருகிறது. பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் அதிமுக அரசை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், இதற்கெல்லாம் பதில் சொல்லும் அதிமுக, “அவர்கள் பேசுவது தனிப்பட்ட கருத்து என்றும், அது பாஜகவின் கருத்து இல்லை” என்றும், தங்களுக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டு வருகின்றனர்.
தற்போது, இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டே அந்த கட்சியைத் தமிழ் மாநில பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்திருப்பது அதிமுகவில் சலசலப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் வேளாண் சட்ட நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை பேசினார்.
அப்போது பேசிய அவர், “தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தைத் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு ஓட்டுக்கு 2000 ரூபாயாக கொடுப்பது தான் தமிழ்நாடு அரசின் நோக்கம்” என்று, அதிமுக அரசையும், முதலமைச்சர் பழனிசாமியையும், அவர் மிகக் கடுமையாக விமர்சித்தார்.
குறிப்பாக, அதிமுகவை சீண்டிப் பார்க்கும் விதமாக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை, “தமிழக அரசு 2000 ரூபாய் கொடுக்கின்றனர் என்பதற்காக
ஐந்தாண்டு வாழ்க்கையை அடகு வைத்து விடாதீர்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் இருக்கும் 2 கோடியே 6 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக 2,500 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி நேற்று முன் தினம் அறிவித்தார்.
இந்த நிலையில் அண்ணாமலையில் பொங்கல் பரிசு தொடர்பான பேச்சானது, அதிமுகவினர் மத்தியில் கடும் கோபத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தி
உள்ளது.
மேலும், “சீமான், கமல் போன்றவர்களை மக்கள் நம்பக் கூடாது, காங்கிரஸ் போன்ற கட்சிகளையும் மக்கள் நம்பக் கூடாது” என்று, அவர் கடுமையாக விமர்சித்தார். எனினும், புதிதாக அரசியலுக்கு வரும் ரஜினியை, அண்ணாமலை ஒரு வார்த்தைகூட விமர்சிக்காதது தமிழக அரசியலில் கவனிக்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அவரது இந்தப் பேச்சு ரஜினியுடன் பாஜக கூட்டணிக்கு அச்சாரமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முன்னதாக, அதிமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தேசிய தலைமை தான் முடிவு செய்யும்” என்று, பாஜக தமிழ் மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியிருந்தது அதிமுக கூட்டணிக்கு பாஜக கொடுக்கும் நெருக்கடியாகவே பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.