இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாக வெளியான சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதியில் கைவிடப்பட்ட 2021 ஆம் ஆண்டின் 14-வது ஐ.பி.எல். போட்டி, பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதை முன்னிட்டு பயோ பபுளில் இருந்த இந்திய, வெளிநாட்டு வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் செய்தனர்.  

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஐ.பி.எல். போட்டி முடிந்ததும், ஐக்கிய அமீரகத்திலேயே நடந்த டி20 உலக கோப்பை போட்டியில், தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி வீரர்கள் பங்கேற்றனர்.  மற்ற வீரர்கள் இந்தியா திரும்பினர். 

இந்த டி20 உலகக் கோப்பையில், மிகவும் வலிமை வாய்ந்த வீரர்கள் உள்ளதால், இந்திய அணி கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது.

உலகக் கோப்பை போட்டியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதவி காலம் முடிந்தது. மேலும், டி20 போட்டியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியும் விலகினார். 

b1

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி, புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் இந்தியாவில் நடந்த டி20 தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது.

அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாளை மறுநாள் ஆடவுள்ளது. இந்திய அணி, 9 மாதங்களில் ஜூன் மாதம் வரை 6 நாடுகளுடனும் ஐ.பி.எல். தொடரிலும் மருத்துவ பாதுகாப்பு வளைத்திற்குள் இருந்து விளையாடவுள்ளது. இதனால், வீரர்களின் உடல்நலம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்பதால், சுழற்சி முறையில் வீரர்களை களமிறக்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்திய வீரர்களின் ஃபிட்னெஸை பராமரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், இந்திய வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடுகளை பிசிசிஐ  கொண்டுவந்துள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் அடுத்த உத்தரவு வரும்வரை, ஹலால் என்று அங்கீகரிக்கப்பட்ட உணவை மட்டும்தான் சாப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை தவிர்த்துவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவுகளுக்குத்தான் தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

b2

‘ஹலால் உணவு இஸ்லாமிய மத நடைமுறையுடன் தொடர்புடையது. குறிப்பிட்ட மத சடங்கிற்கு உட்படுத்தப்பட்டு தயாரிக்கும் இந்த உணவை விளம்பரப்படுத்தும் நோக்கில் பி.சி.சி.ஐ. நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது. இந்து, சீக்கிய வீரர்களை இந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்?’ என கூறி எதிர்ப்பு வலுத்துள்ளது.

மேலும், “மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியில் அதிக சத்துக்கள் இருக்கிறது. விளையாட்டு வீரர்கள் இந்த உணவுகளைத்தான் அதிகம் எடுத்துக்கொண்டு வருகின்றனர். இதனை ஏன் தடை செய்கிறீர்கள்? பிசிசிஐ உள்நோக்கத்துடன் செயல்படுகிறது” என பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இனிமேல் அசைவ உணவுகளை சாப்பிட விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் அனைத்துவிதமான அசைவ உணவுகளையும் சாப்பிடமுடியாது. ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று பிசிசிஐ கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்களுக்கிடையே பெரும் விவாதம் நடந்துவருகிறது.

இதற்கிடையில், டி20 தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி அசத்திய கே.எல். ராகுல் டெஸ்ட் போட்டியிலும் அசத்த காத்திருந்தார். ஆனால், தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் கான்பூர் டெஸ்டில் பங்கேற்கமாட்டார் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

இதனால் கே.எல். ராகுலுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. ஏற்கனவே மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்கள் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது.