“மு.க.ஸ்டாலினும், ராசாவும் அரை நிர்வாணத்தில் விரைவில் வருவார்கள்” அர்ஜுன் சம்பத் கடும் விமர்சனம்..
By Aruvi | Galatta | Feb 01, 2021, 10:19 am
“மு.க.ஸ்டாலினும், ராசாவும் அரை நிர்வாணத்தில் விரைவில் வருவார்கள்” என்று, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற, மக்கள் குறைகேட்கும் தேர்தல் பிரசார நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் நேற்று நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
இதனையடுத்து, தொடர்ந்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ஆவடி தொகுதியைப் பொறுத்தவரையில், பாண்டியராஜன் எம்.எல்.ஏ. மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரும் ஆவார். ஆனால், அவர் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அல்ல, இந்தி வளர்ச்சித்துறை அமைச்சர்” என்று, பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
அத்துடன், “இந்தியின் வளர்ச்சிக்காகத்தான் அவர் பாடுபடுகிறார் என்றும், அவர் முதலில் பாஜக, அடுத்து தேமுதிக, அடுத்து அதிமுக, இப்போதும் தோற்றதும் மறுபடியும் அவர் பாஜகவுக்கு போகத்தான் போகிறார் என்றும், அவர் ஆர்எஸ்எஸ்சில் இருந்து வந்தவர் என்பதால், தமிழ்நாட்டு மக்களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், “எனக்கு வேல் பரிசளிக்கப்பட்டதால், நான் சூரசம்ஹாரம் செய்துவிடுவேன் என்று முதலமைச்சர் பயப்படுகிறாரா?” என்றும், மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதன் தொடர்ச்சியாக, தேனியில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “3 புதிய வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது” என்று, குறிப்பிட்டார்.
“எந்தவித காரணத்தைக் கொண்டும் மத்திய அரசு வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கூடாது என்றும், டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட தேச விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் கூறினார்.
“இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 3 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.
அத்துடன், “மேடைதோறும் கைகளில் வேல் ஏந்திவரும் மு.க. ஸ்டாலின், தேர்தலுக்காக இரட்டை வேடம் போடுவதாகவும், தமிழில் நாங்கள் கந்த சஷ்டி கவசம் கூறுவதற்குத் தயாராக இருக்கிறோம் என்றும், அதனைக் கேட்டு ஆ.ராசா, மு.க. ஸ்டாலின் போன்றோர் அலகு குத்தி, அரை நிர்வாணத்துடன் விரைவில் செல்வார்கள்” என்றும், கடும் விமர்சனம் செய்தார். இந்த விமர்சனம், திமுக தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில், “சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருப்பது” குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அர்ஜுன் சம்பத், “இதை அதிமுக வினரிடம் தான் கேட்க வேண்டும் என்றும், எங்களைப் பொறுத்த வரை கொரோனா தொற்றிலிருந்து மீண்டு சசிகலா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்” என்றும் கூறினார்.