உள்ளாட்சி தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 30-ல் தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இதுவரை இரு கட்சிகளுக்கும் இடையே இதுவரை உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் அதிமுக பாஜக கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது. பாஜக 20% இடங்களில் போட்டியிட இடங்களைக் கேட்பதாகவும் இருப்பினும் அதிமுக அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக - அதிமுக கட்சிகளுக்கு இடையே இடப்பங்கீடு குறித்து விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால், பாஜக-அதிமுக கூட்டணி முறிந்தது. சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் எனவும், ஒவ்வொரு வீடாக பாஜகவையும் தாமரையும் கொண்டு செல்ல தனித்துப் போட்டியிடுவது ஒரு வாய்ப்பு என்றும் தெரிவித்தார். சிறிது நேரத்தில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தேசிய அளவில் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான 4-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் நாமக்கல், திருப்பூர், கோவை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அதிமுக சார்பில் ஏற்கனவே மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவித்திருந்நிலையில் தற்போது நான்காவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.