இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், சம காலத்தில் இயற்கையோடு ஒன்றித்து நம்மோடு வாழ்ந்தார் என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பூரிக்கிறது. அவரது நினைவு தினமான இன்று, அவரைப் பற்றிய சில நினைவலைகளைக் காணலாம்..

காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அடுத்து உள்ள இளங்காடு என்னும் சிறிய கிராமத்தில் பிறந்த இந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், விவசாயம் பற்றிய விசயத்தில் உலக அளவில் ஒரு பசுமைப் புரட்சியைச் சத்தமே இல்லாமல் செய்து காட்டிய ஒரு எளிய மனிதர்.

இந்த சாதனை மனிதன் பற்றி வைத்த பசுமைப் புரட்சி தான், தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு தற்போது இந்த டிஜிட்டல் உலகிலும் பெருகி நிற்க ஒரே காரணமாக இருக்கிறது.

அதாவது, தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் விவசாய பயிர்களில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டதைக் கண்டு கொதித்தெழுந்த அவர், “இதனால், மண்வளம் பாதிக்கப்படுவதாக” இந்த உலகிற்கு உறக்கச் சொன்னார்.

இதனால், தான் வகித்து வந்த மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் அரசுப் பதவியையும் அவர் உதறித்தள்ளினார்.

அதன் பிறகு தான், நமக்கு நம்மாழ்வார் என்ற ஒரு பசுமை மனிதன் கிடைத்தார். 

இவர், பசுமைப்புரட்சிக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் பல்வேறு பேரணிகள், பொதுக் கூட்டங்கள் என இவர் கால்கள் படாத பகுதிகளே தமிழகத்தில் இல்லை என்று சொல்லும் அளவுக்குத் தமிழ் மண்ணின் வாசம் நுகர்ந்தவர்.

இதன் மூலமாகவே தமிழகம் மட்டுமின்றி, உலக அளவில் பொது மக்களிடம் இவர் விவசாயத்தில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

குறிப்பாக, தமிழகத்தில் மறைந்துபோன பாரம்பரிய இயற்கை விவசாயம் தொடர்பாக ஏற்பட்டு உள்ள அனைத்து விழிப்புணர்வுக்கும், வரவேற்பிற்கும் காரணமாகவே அமைந்து போனார் நம்மாழ்வார்!

நமது முன்னோர்கள் காக்கத் தவறி, என்பேதே நம்மை விட்டு மறைந்துபோன நமது பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, நெல் ஜெயராமனை ஊக்கப்படுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட நமது பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் புரட்சிக்கு அச்சாணியே விதைத்தவர் தான் இந்த பசுமை மனிதன் நம்மாழ்வார். 

தமிழகம் முழுக்க பல்லாயிரக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்கி, வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அரசின் வேளாண்மைத் துறையில் அங்க வேளாண்மை பிரிவை உருவாக்கப் பாடுபட்டதில் தனது பெரும் பங்கை ஆற்றினார். அது தொடர்பாக வீர நடையும் போட்டார்.

மிக முக்கியமாக, “ஒற்றை நாற்று நடவு, செம்மை நெல் சாகுபடியை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழர்கள் தான்” என்ற, மாபெரும் உண்மையை அடிப்படை ஆதாரங்களுடன் இந்த வெளி உலகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டினார் நமது நம்மாழ்வார். 

நம்மாழ்வார் பேசும் கூட்டங்களில் எல்லாம், “நாட்டு மரங்கள், நாட்டு மாடுகள், கால்நடைகள் மற்றும் நாட்டு விதைகளின் அவசியத்தை எளியவர்களும் உணரும் வகையில் எதார்த்த மொழி நடையில் பேசி, அனைவருக்கும் புரிய வைத்த ஒரு மாபெரும் மேதை நம்மாழ்வார்.

நம்மாழ்வார் வெறும் வாய் வார்த்தையாக மட்டும் எதையும் சொல்லாமல் களத்தில் இறங்கி அதனைச் செய்து காட்டவும் செய்தவர். கூடவே, தனக்குப் பிறகு வரக்கூடிய எதிர்கால சந்ததிகளும் பயன்பெற வேண்டும் என்று நினைத்த அந்த உன்னத மனிதன், “உழவுக்கும் உண்டு வரலாறு”, “இனி விதைகளே பேராயும்”, “நோயினை கொண்டாடுவோம்” உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிவிட்டு, தனது வாழ்வை அர்த்தப்படுத்திவிட்டு தான் அவர் இயற்கையோடு இயற்கையாக ஒன்றிப்போனார்.

மிக முக்கியமாக, பசுமை விஞ்ஞானி நம்மாழ்வார், தனது இறுதிக் காலத்தின்போது, தஞ்சை டெல்டா மாவட்டங்களில் கொண்டுவர இருந்த மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அதனை உயரப் பிடித்து, தனக்குப் பின்னர் ஒட்டுமொத்த வேளாண் பெருமக்களையும் வழி நடத்திச் சென்ற ஒரு மாபெரும் வழிகாட்டியாய் திகழ்ந்து, நம்மை விட்டும் மறைந்துபோனார். 

அப்படிப்பட்ட பசுமை நாயகனை கொண்டாடமல் போனால் எப்படி?

காலமெல்லாம் இயற்கை வேளாண்மையை, வாழ்வியலை மீட்க போராடிய நம்மாழ்வாரை, அவரது நினைவு நாளான இன்று நினைவு கூர்வதில், கலாட்டா பெருமை கொள்கிறது.

இயற்கையைப் போற்றுவோம்.. பசுமையை வளர்ப்போம்..!