“அதிமுகவில் இருந்துக்கொண்டு தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு கட்சி மாறினால், வீடு தேடி வந்து வெட்டுவேன்” என்று, பேசிய அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முககனியை கைது செய்ய போலீசார் முயன்ற போது, அவர் மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் போலீசார் கைது செய்யும் போது, சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கை, கால் முறிவு ஏற்படுவது என்பது ஒன்றும் புதிய விசயம் இல்லை.

அதாவது, தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் எல்லா அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் மிக தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது. 

அந்த வகையில் தான், கடந்த 28 ஆம் தேதி அன்று, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளரான சண்முகக்கணி, அதிமுகவினர் மத்தியில் ஆவேசமாக பேசினார். 

அப்போது பேசிய அவர், “அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு கட்சி மாறி போனால், அவர்களை நான் வீடு தேடி வெட்டுவேன்” என்று, பேசியிருந்தார்.

குறிப்பாக, தொடர்ந்து பேசிய அவர் “மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிட்டு வந்து வெட்டுவேன். என் வெட்டு முதல் வெட்டாக இருக்கும், உங்கள் பிரேதப் பரிசோதனை அரசு மருத்துவமனையில் தான் இருக்கும்” என்று, தனது கட்சியினரை மிரட்டும் வகையில் அவர் பேசினார். 

இது, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது பேச்சு வீடியோவாக அனைத்து சமூக வலைதளங்களிலும் பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ, அந்த பகுதியில் உள்ள போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. இது குறித்து அதிமுக பிரமுகர் சண்முகக்கணி மீது, கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது, கலவரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியது என்று மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, அதிமுக பிரமுகர் சண்முகக்கணி தலைமறைவானார்.

இதனால், சாத்தூர் காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து, அதிமுக பிரமுகர் சண்முகக்கணியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தான், அதிமுக பிரமுகர் சண்முகக்கணி அவரது வீட்டில் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து, அங்கு விரைந்துச் சென்ற போலீசார்  அதிமுக பிரமுகர் சண்முகக்கணியை கைது செய்ய முயன்றனர்.

அப்போது, அவர் தனது வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து தப்பித்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, அவர் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்ததில், அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கால் முறிவு ஏற்பட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முககனி, தற்பொபோது கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம், அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.