திமுக மீது பாய்ந்த எடப்பாடி.. “திமுக ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல்” என குற்றச்சாட்டு
“திமுக ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருப்பதாக” எதிர்க்கட்சி தலைவர் எடப்படி பழனிம்சாமி, பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
நாமக்கல் கோவிந்தம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் தான், ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் மக்களை திசை திருப்பும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளை நடத்தி வருவதாக” குற்றம்சாட்டினார்.
அத்துடன், “கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது, திமுக சார்பில் 525 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன என்றும், ஆனால் அதில் 3, 4 தவிர வேறு எந்த வாக்குறுதியும் திமுக நிறைவேற்றவில்லை” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.
“குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, நீட் தேர்வு ரத்து, முதியார் உதவித் தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உயர்வு என்பது போன்ற எந்த கோரிக்கையும் திமுக இதுவரை நிறைவேற்றவில்லை” என்றும, அவர் கூறினார்.
“பெட்ரோல் டீசல் விலைகுறைக்கப்படும் என வாக்குறுதி அளித்து விட்டு பெட்ரோலுக்கு மட்டும் சிறிதளவு விலை குறைத்தார்கள் என்றும், ஆனால் டீசலுக்கு குறைக்கவேயில்லை” குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலை குறைத்த போதிலும் திமுக அரசு குறைக்கவில்லை” என்றும், அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், “பொய்யான வாக்குறுதிகளை அளித்து கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை மறைப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறது என்றும், அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற திமுக அரசு, மக்களை திசை திருப்பும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ரெய்டு நடத்தி வருகிறது” என்றும், சுட்டிக்காட்டினார்.
“இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் மூலமாக, அதிமுகவை அசைத்து விட முடியாது என்றும், இந்த வழக்குகளை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம்” என்றும், அவர் திட்டவட்டமதாக தெரிவித்தார்.
குறிப்பாக, ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்றும், திமுகவைச் சேர்ந்த 13 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், ஆனால் அந்த வழக்குகளில் எந்த நடவடிக்கையும் இல்லை” என்றும், அவர் கூறினார்.
அதே போல், “தமிழகத்தில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
முக்கியமாக, “திமுக ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருக்கிறது என்றும், நல்ல நிர்வாகம் இல்லாத காரணத்தால் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.
“மே மாதம் ஆட்சிக்கு வந்த நிலையில், வட கிழக்கு பருவமழைக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு லஞ்சம் கேட்கப்பட்டால், ஒப்பந்ததாரர்கள் பணியை நிறுத்தி விட்டனர் என்றும், இதனாலேயே பல இடங்களில் தண்ணீர் தேங்கியது” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.
இந்த சூழலில் தான் “வரும் 17 ஆம் தேதி அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம் என்றும், அதை முடக்குவதற்காக இதுபோன்ற ரெய்டு நடத்துகிறார்கள்” என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.