விவேக்கின் நிறைவேறாத ஆசையை நாம் நிறைவேற்றுவோமா? நீங்கள் செய்வீர்களா!?
By Aruvi | Galatta | Apr 17, 2021, 06:59 pm
பசுமை காதலன் நடிகர் விவேக்கின் நிறைவேறாத ஆசையை ஒன்று, இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் மனித நேயம் வளர்த்துக்கொண்டிருந்த நடிகர் விவேக், சத்தமே இல்லாமல் இயற்கை சார்ந்த விசயங்களில் களப் பணி ஆற்றிக்கொண்டு இருந்தார்.
இப்படியா நிலையில் தான், தனது 59 வது வயதில், இயற்கை விவேக்கை வாரி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது.
இந்த நிலையில் தான், மறைந்த விவேக்கின் நிறைவேறாத ஆசைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நிறைவேறாத ஆசைகளில் 2 விசயங்கள் உண்டு.
அதில் ஒன்று, “உலகநாயகன் கமலுடன் நடிக்க வேண்டும் என்பது. அந்தக் கனவு “இந்தியன் 2” வின் மூலமாக நனவாக இருந்தது. ஆனால், படமும் பாதியில் நின்ற நிலையில், அந்த படம் வெளி வருமா என்று தெரிவதற்குள்ளாகவே, இந்த உலக வாழ்க்கையில் இருந்து விவேக் விடை பெற்றுச் சென்று விட்டார்.
அதே போல், அவர் சினிமாவில் இயக்குநராக சில திரைப்படங்களை இயக்கவும் விவேக் திட்டமிட்டு இருந்தார். ஆனால், அதுவும் நிறைவேறவே இல்லை.
மிக முக்கியமாக, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டகர் ஏபிஜே அப்துல் கலாம் மீது மிகப் பெரிய அன்பும், பக்தியும் கொண்டவராகத் திகழ்ந்த நடிகர் விவேக், கலாம் பெயரில் “க்ரீன் கலாம்” என்ற அமைப்பை முன்னெடுத்து மரம் நடும் பணியைச் செய்து வந்தார். இதனை, கலாமின் வழிகாட்டுதலின் கீழ் பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்து மாணவ, மாணவிகளை ஊக்குவித்தும், அவர்களை உற்சாகப்படுத்தியும் வந்தார் நடிகர் விவேக்.
இந்த திட்டத்தின் கீழ் தன்னுடைய வாழ்நாளில் ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்கிற மிக உயரிய லட்சியத்தை உருவாக்கிக்கொண்ட நடிகர் விவேக், அதை நோக்கிய தனது வாழ்க்கை பயணத்தில் பயணிக்கத் தொடங்கினார்.
நடிகர் விவேக், இன்று உயிரிழக்கும் முன்பு வரை கிட்டதட்ட 33 லட்சம் மரங்களை அவர் நட்டு வைத்திருக்கிறார். ஆனால், ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்கிற அவரது ஆசை அவருக்கு கைகூடாமல் போய் விட்டது தான், இணையத்தில் இன்று வைரலாகி வருகிறது.
மேலும், திருப்பத்தூரில் இருக்கும் கல்லூரி ஒன்றில் மரக்கன்றுகளை நட வருவதாக நடிகர் விவேக், ஏற்கனவே வாக்குறுதி அளித்து, அதற்கான தேதியையும் ஒதுக்கி கொடுத்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றாமலே போனதால், அதனை “நான் நிறைவேற்றுகிறேன்” என்று, திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் தற்போது கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள எஸ்.பி. விஜயகுமார், “திருப்பத்தூரில் இருக்கும் கல்லூரி ஒன்றின் மாணவ, மாணவியருக்கு விவேக் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் மரக்கன்றுகளை ஏந்திச் சென்று ரசிகர்கள் சிலர் அஞ்சலி செலுத்தினர்.
இவற்றுடன், தமிழகத்தின் சில பகுதிகளில் மாணவர்கள் சிலர், மறைந்த விவேக்கின் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வைத்து, அவற்றைப் போட்டோ எடுத்து தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இயற்கையைக் காக்க, தமிழகத்தில் வறட்சியைப் போக்க நிறைவேறாமல் போன நடிகர் விவேக்கின் ஆசையை நிறைவேற்ற, சில இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தற்போது உறுதி ஏற்றுள்ளனர். அவர்களோடு நாமும் கை கோர்ப்போம். நமது வாழ்நாளில் ஒரு மரக்கன்றாவது நட்டு வைப்போம் என்ற உறுதி மொழி ஏற்போம். அது தான், ஜனங்களின் கலைஞனுக்கு நாம் செய்யும் இறுதி அஞ்சலியாக இருக்கும்.
பசுமை காதலன் விவேக்கின் நிறைவேறாத ஆசையை, நிறைவேற்ற நாமும் புறப்படுவோம்.. புது யுகம் நோக்கி..!