பொன்.ராதாகிருஷ்ணன் உடன் மோதும் நடிகர் விஜய் வசந்த்! கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டி..
By Aruvi | Galatta | Mar 14, 2021, 12:27 pm
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் நடிகர் விஜய் வசந்த் போட்டி போடுகிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இவற்றுடன், காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு பாஜகவிற்கு தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தன. இதனால், அந்த தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று, அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதே போல், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, 25 இடங்களில் ஒதுக்கப்பட்ட இருந்தன. இவற்றுடன், காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ்க்கு ஒதுக்கீடு செய்து திமுக தலைமை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் முன்னதாக வெளியிடப்பட்டது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்பே, அது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆரணி எம்.பி விஷ்ணு பிரசாத் தனது ஆதரவாளர்களுடன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் உண்ணா விரதத்தில் ஈடுபட்டார். அத்துடன், கரூர் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோர் பணம் உள்ளவர்களுக்குத்தான் சீட் வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆனால், இந்த எதிர்ப்பையெல்லாம் தாண்டி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உட்பட 21 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டன.
அதில், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகர் விஜய் வசந்த் போட்டியிடுவார் என்று, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து, நடிகர் விஜய் வசந்த் நேரக்கு நேர் மோதுகிறார்.
மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் மறைவுக்கு பிறகு, தந்தையின் இடத்தை நிரப்ப வந்திருக்கும் நடிகர் விஜய் வசந்த். முதன் முதலாகத் தேர்தல் களத்தில் இப்போது தான் போட்டியிடுகிறார். இந்த முதல் போட்டியிலேயே, அவர் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் என்ற பிம்பமும், காங்கிரஸ் சார்பில் முதன் முதலாகத் தேர்தலை சந்திக்கும் வசந்த குமாரின் மகன் விஜய் வசந்த்துக்கு, நடிகர் என்ற பிம்பமும் உள்ளது. இதன் காரணமாக, கன்னியாகுமரி மக்களவை இடைத் தேர்தலில் அந்த தொகுதி மக்களிடம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.