மத்தியில் பாஜக பதவி ஏற்றதிலிருந்தே, பாஜகவின் செயல்பாடுகளை விமர்சித்து நடிகர் சித்தார்த் தொடர்ச்சியாக பேசி வருகிறார். இன்று மதம் மாறுவதற்கு எதிராக உத்தர பிரதேசம் கொண்டு வந்திருக்கும் சட்டத்தை கண்டித்து பேசியிருக்கிறார். 


மதம் மாற்று நோக்கத்துடன் இஸ்லாமிய ஆண்கள் இந்துப் பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி திருமணம் செய்து வருகிறார்கள் என்று பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கூறிவருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு, லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவந்துள்ளது.

இந்த சட்டத்தின் படி திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது எனவும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றினால் 10 ஆண்டுகள் சிறை எனவும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவந்து இருக்கிறார் யோகி. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இரண்டு பேரு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் 2 மாதங்களுக்கு முன்பே மாவட்ட நீதிபதியிடம் அனுமதி பெற வேண்டும். முறையான விசாரணைக்குப் பிறகே அனுமதி வழங்கப்படும் என்கிறது அந்த சட்டம். நாடு முழுவதும் இந்தச் சட்டத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துவருகிறது.

 
இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சித்தார்த், ’வயது வந்த ஒரு பெண் தான் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்படிச் செய்து கொள்ள வேண்டும் என்று இவர்கள் முடிவு செய்கிறார்கள். எவ்வளவு தைரியம்? நாம் விரும்பதை சாப்பிட, பேச, பாட, எழுத, படிக்க, விரும்பவரை திருமணம் செய்து கொள்ள என எதற்கும் நமக்கு உரிமை கிடையாது. அவர்களை பொறுத்தவரையில் மக்கள் யாருக்கும் எதைச் செய்யவும் உரிமை இருக்கக் கூடாது” என புதிய இந்தியா என்று ஹாஷ்டேகில் பதிவு செய்துள்ளார். 


மேலும் கர்நாடக மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயன், ’ நாங்கள் மாட்டிறைச்சி மற்றும் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம் கொண்டுவர செயல்பட்டு இருக்கிறோம் என்றும் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அறிவித்து வருகின்றனர்.