குடியுரிமை சட்டத்துக்காக மோதிக்கொண்ட சினிமா பிரபலங்கள்!
By Arul Valan Arasu | Galatta | 08:00 PM
குடியுரிமை சட்டத்துக்காக சினிமா பிரபலங்கள் டிவிட்டரில் சண்டை போட்டுக்கொள்வது வைரலாகி வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு, அரசு போராட்டங்களை முடக்கி வருகிறது.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டது.
இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நடிகர் சித்தார்த்தும் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
இதனையடுத்து, நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர், வீடு திரும்பிய நடிகர் சித்தார்த், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதன்படி, “எனக்கும், என் அன்பார்ந்தவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடியைப் பின்பற்றும் கணக்குகளிலிருந்து டிவிட்டுகள் மூலம் கைது செய்வோம் என்று மிரட்டல் வருகின்றன. சுதந்திரமான தேசத்தில் எங்கள் மனதில் இருப்பதைப் பேச முயல்கிறோம். அசிங்கமான வார்த்தைகளும், கடுமையான சட்டங்களும் எதிர்ப்புக் குரல்களை நெரிக்க முடியாது. எதிர்ப்பையும் மீறி நாங்கள் நிலைப்போம். ஜெய்ஹிந்த்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சித்தார்த்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, “சமூக ஊடகத்தில் மக்களைத் தவறாக வழிநடத்துகிறீர்கள் என்றால், பொய்யான பிரச்சாரம் எச்சரிக்கப்படும். எல்லா பிரபலங்களும் புத்திசாலிகள். அவர்கள் சொல்வது சரி என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் மீது பொய்மை திணிக்கப்படுகிறது. மக்கள் உணர்ச்சிவசப்படுகின்றனர். கவலைப்படுகின்றனர். ஆதாரமில்லாமல் பொய்யான செய்திகள் பரப்புவது தவறு. சாதாரண மக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். தேசியப் பிரச்சினையில் நமக்கும், சாதாரண மனிதருக்கும் வித்தியாசம் இல்லை. பொய்யான செய்திகள் மூலம் அமைதியைக் கெடுப்பது அல்லது பொது மக்களைத் தொந்தரவு செய்வது, அவர்களைத் தூண்டுவது எல்லாம் கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது, நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை காயத்ரி ரகுராம் ஆகிய இருவரின் கருத்துக்களும் டிரண்டாகி வருகிறது.