“மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர எந்த பள்ளியும் கட்டாயப்படுத்தக்கூடாது! அன்பில் மகேஷ் அதிரடி
“மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்று, எந்த தனியார் பள்ளியும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது” என்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குக் கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளார்.
அதில், “சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்கலாம் என்றும், இன்னும் சில கல்வி அதிகாரிகள் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளைத் திறக்கலாம்” என்றும், அறிவுறுத்தியிருந்ததையும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தான், சற்று முன்பாக சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “மாஸ்க் அணியாமல் வரும் மாணவர்களுக்குப் பள்ளியிலேயே அதனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டார்.
அத்துடன், “இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் 12 ஆம் வகுப்பு சான்றிதழில் அரசின் அங்கீகார சீல் இல்லாதது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அவர் கூறினார்.
மேலும், “தமிழக அரசின் அங்கீகார சீல் இல்லாததால் வேறு மாநிலங்களில் தமிழக மாணவர்கள் சேருவதில் சிக்கல் என தகவல் வெளியானதைத் தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளார்.
அதே போல், “மாணவர்கள் கண்டிப்பாகப் பள்ளிக்கு வர வேண்டும் என்று, எந்த தனியார் பள்ளியும் கட்டாயப்படுத்தக்கூடாது” என்று கட்டளையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், “மாஸ்க் அணியாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்குப் பள்ளியிலேயே அதனை வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும்” தெரிவித்தார்.
குறிப்பாக, “ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம் என தனியார் பள்ளிகளைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றும், அவர் வலியுறுத்தினார்.