சென்னையில் இன்று 9 பேர் கொரோனாவுக்கு பலி!
By Aruvi | Galatta | Jun 03, 2020, 02:28 pm
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று மட்டும் கொரோனா வார்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காகத் தீயணைப்புத் துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் 25 இருசக்கர வாகனங்களின் சேவையை, முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்
கொரோனா வைரஸ், சென்னையில் மையம் கொண்டு, அனைவரையும் தாக்கி வருகிறது. கடந்த 3 நாட்களாகச் சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து 10யை தாண்டி வருகிறது.
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த 9 பேர், இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால், சென்னை மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.
சென்னையில் தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் மேலும் ஒரு பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. ஏற்கனவே தேர்வுத்துறை உதவி இயக்குநர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, தேர்வுத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது. கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
மிகச் சரியாக ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேரும், தண்டையார்பேட்டையில் 2,007 பேரும், கோடம்பாக்கத்தில் 1,921 பேரும், திரு.வி.க.நகரில் 1,711 பேரும், தேனாம்பேட்டையில் 1,871 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், அண்ணாநகரில் 1,411 பேரும், வளசரவாக்கத்தில் 910 பேரும், அடையாறு பகுதியில் 949 பேரும், அம்பத்தூரில் 619 பேரும், திருவொற்றியூரில் 559 பேரும், மாதவரம் பகுதியில் 400 பேரும், மணலியில் 228 பேரும், பெருங்குடியில் 278 பேரும், ஆலந்தூரில் 243 பேரும், சோழிங்கநல்லூரில் 279 பேரும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள குடிசைப் பகுதிகளில் கபசுர குடிநீர், மாஸ்க் இலவசமாகத் தரப்படுகிறது. ஆலந்தூர் மண்டலத்தில் கபசுர குடிநீர், மாஸ்க் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.